வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஜூலை 29ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு பார்படாஸ் நகரில் துவங்கியது.
முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றமாக செயல்பட்ட நிலையில் 2023 உலக கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் நோக்கத்துடனும் பணிச்சுமையை நிர்வகிக்கும் வகையிலும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த போட்டியில் ஓய்வெடுத்தனர். அதனால் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கிய நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் – இஷான் கிசான் ஆகியோர் ஆரம்பம் முதலே நிதானம் கலந்த அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
தோனியின் வழியில்:
அதில் கடந்த போட்டியில் அரை சதமடித்த இஷான் கிசான் அதே வேகத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் நிதானமாக செயல்பட்ட சுப்மன் கில் 17 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 90 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ஆனாலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட அவர் 5 பவுண்டரியுடன் 34 (49) ரன்கள் எடுத்திருந்த போது குடகேஷ் மோட்டி சுழலில் ஆட்டமிழந்தார். அப்போது அக்சர் படேல் களமிறங்கிய நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய இஷான் கிசான் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதமடித்து 55 (55) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
குறிப்பாக கடந்த போட்டியிலும் 52 ரன்கள் எடுத்த அவர் இந்த போட்டியிலும் 55 ரன்களை எடுத்ததால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் 50 ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையும் சமன் செய்தார். இதற்கு முன் கடந்த 2017 சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3வது போட்டியில் 78* ரன்களும் 4வது போட்டியில் 54 ரன்களும் தோனி முதல் விக்கெட் கீப்பராக எடுத்திருந்தார்.
அதை விட கடந்த டிசம்பர் மாதம் வங்கதேசம் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் தொடக்க வீரராக இரட்டை சதமடித்திருந்த அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இதுவரை 5 இன்னிங்ஸில் 348 ரன்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 5 இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையை சச்சினை முந்தி இஷான் கிசான் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. இஷான் கிசான் : 348*
2. சச்சின் டெண்டுல்கர் : 321
3. சுப்மன் கில் : 320
4. கிறிஸ்னமாச்சாரி ஸ்ரீகாந்த் : 261
இருப்பினும் அவருக்கு பின் அக்சர் படேல் 1 (8) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்ததாக வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 7 ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அப்போது காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட சஞ்சு சாம்சன் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
இதையும் படிங்க:உங்களுக்கு டென்னிஸ் லில்லி தெரியாதா, இல்ல பாண்டியா 142 கிலோவா? ரவி சாஸ்திரி கருத்துக்கு – கபில் தேவ் பதிலடி
அப்போது மழை வந்து தடுத்ததால் 24.1 ஓவரில் 113/5 என்ற ஸ்கோருடன் இந்தியா தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. களத்தில் சூரியகுமார் யாதவ் தனது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.