இந்தியாவில் சயீத் முஸ்டாக் அலி 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் லீக் மற்றும் செமி ஃபைனலில் வெற்றி பெற்ற ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. அதைத் தொடர்ந்து மாபெரும் இறுதிப்போட்டி டிசம்பர் 18ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு புனேவில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹரியானா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணிக்கு விராட் சிங் 2 ரன்னில் அவுட்டானார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் இசான் கிசான் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவருக்கு எதிர்ப்புறம் வந்த குமார் குஸக்ரா தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி கை கொடுத்தார்.
இஷான் கிசான் வரலாற்று சாதனை:
அதைப் பயன்படுத்தி ஹரியானா பவுலர்களை வெளுத்து வாங்கிய இசான் கிசான் அரை சதமடித்தார். அதே போல மறுபுறம் அசத்திய குஸக்ராவும் தம்முடைய பங்கிற்கு அரை சதமடித்து அசத்தினார். நேரம் செல்ல செல்ல அபாரமாக விளையாடிய அந்த ஜோடியில் இசான் கிசான் 6 பவுண்டரி 10 சிக்ஸர்களை பறக்க விட்டு சதமடித்து 101 (49) ரன்களை 206.12 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார்.
இதன் வாயிலாக சயீத் முஸ்டாக் அலி டி20 கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் சதமடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை கிசான் கிசான் படைத்தார். 2007 முதல் நடைபெற்று வரும் அத்தொடரில் இறுதிப் போட்டியில் வேறு எந்த கேப்டனும் சதத்தை அடித்ததில்லை. 2024 சீசனில் மத்தியப்பிரதேச கேப்டன் ரஜத் படிதார் மும்பைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 81* ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோராகும்.
மற்றொரு போட்டி:
ஒரு கட்டத்தில் மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய இசான் கிசான் இந்தியாவுக்காகவும் அறிமுகமானார். ஆனால் அந்த வாய்ப்பில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்தத் தவறியதால் கழற்றி விடப்பட்டுள்ள அவர் மீண்டும் கம்பேக் கொடுக்கப் போராடி வருகிறார். குறிப்பாக தற்போதைய அணியில் ஓப்பனிங்கில் தடுமாறி வரும் சுப்மன் கில்லுக்கு போட்டியாக சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் ஆகியோருடன் தாமும் இந்தியாவுக்காக விளையாட காத்திருக்கிறேன் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜஸ்ப்ரீத் பும்ராவின் வருகையால் மீண்டும் வாய்ப்பை இழக்கும் கம்பீரின் செல்லப்பிள்ளை – விவரம் இதோ
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் எதிர்ப்புறம் அசத்திய குஸக்ரா 8 பவுண்டரி 5 சிக்ஸருடன் 81 (38) ரன்கள் விளாசி அவுட்டானார். கடைசி நேரத்தில் அங்குல் ராய் அதிரடியாக 40* (20), ராபின் மிஸ் 31* (14) ரன்கள் விளாசி அபாரமான ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் ஜார்க்கண்ட் 262/3 ரன்கள் குவித்து மிரட்டியது.



