கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஏலத்தில் எடுக்கப்பட்ட வைபவ் சூர்யவன்சி சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அறிமுகமானார். இதன் காரணமாக மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியதோடு மட்டுமின்றி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தலான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.
வைபவ் சூர்யவன்ஷியை எச்சரித்த இர்பான் பதான் :
அதோடு அந்த தொடரின் ஒரு முக்கிய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதிவேக சதம் ஒன்றிணையும் அடித்து அசர வைத்திருந்தார். இப்படி 14 வயதே ஆன ஒரு இளம் வீரர் சர்வதேச பவுலர்களை எதிர்த்து மிகச் சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தியது பலரையும் பிரமிக்க வைத்திருந்தது. அதனை தொடர்ந்து ஐபிஎல் முடிந்த கையோடு 19 வயதுக்குட்பட்ட ஒரு இந்திய அணிக்காக விளையாடிய அவர் 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றவும் மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
அதுமட்டுமின்றி ரஞ்சி போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இப்படி அவரது பேட்டில் இருந்து எந்த வடிவத்திலும் ரன்கள் வந்து கொண்டே இருப்பதனால் இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராகவும் பார்க்கப்படுகிறார். எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் அவர் இந்தமுறை இன்னும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவரை எச்சரித்து சில கருத்துக்களை முன்னாள் வீரரான இர்பான் பதான் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : வைபவ் சூர்யவன்ஷி எளிதாக ரன்களை குவித்து வருகிறார். அவர் தொடர்ந்து ரன்களை குவிக்கும் போது அவருடைய தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஆனால் கடந்த ஐபிஎல் சீசனை போன்று இல்லாமல் இம்முறை அவருக்கு எதிராக பந்துவீச்சாளர்கள் தெளிவான திட்டத்துடன் வருவார்கள்.
இதையும் படிங்க : 7 கிலோ எடை இழப்பு.. அதை சரி பண்ண போதும் போதும்னு ஆயிடுச்சு.. காயம் குறித்து – ஷ்ரேயாஸ் ஐயர் பேச்சு
ஏனெனில் அவர் பேட்டிங் செய்யும் பல வீடியோக்கள் தற்போது இருக்கின்றன. அதை வைத்து அவரது பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை பிடித்து பந்து வீச்சாளர்கள் அவருக்கு எதிராக திட்டத்தை வகுப்பார்கள். அதனால் அவர் சற்று இந்த தொடரை கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.



