இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் ஜனவரி 11ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் இந்திய அணிக்காக விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட உள்ளார்கள். அதனால் அவர்களுடைய ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் வழக்கமான ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன் வயதைக் காரணமாக வைத்து அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது. அதற்காக அசராத அவர்கள் கடந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்களில் தொடர்நாயகன் விருது வென்று ஐசிசி தரவரிசையில் டாப் 2 பேட்ஸ்மேன்களாக முன்னேறி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
முத்தரப்பு தொடர் நடத்துங்க:
அது மட்டுமின்றி விஜய் ஹசாரே கோப்பை 2025 கோப்பையில் தங்களது மாநில அணிக்காக விளையாடிய அவர்கள் சதமடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இந்நிலையில் டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட விராட், ரோஹித் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். எனவே அவர்களுக்காக தொடரின் நீளத்தை 5 போட்டிகளாக அதிகரிக்க வேண்டும் என்று பதான் கேட்டுக் கொண்டுள்ளார்.
அல்லது முத்தரப்பு தொடரை நடத்தினால் கூட விராட், ரோஹித் விளையாடுவதால் ரசிகர்களிடையே ஒருநாள் போட்டிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்று பதான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதனாலேயே ஒரு விஷயத்தை நான் தொடர்ச்சியாக சொல்லி வருகிறேன். நாம் ஏன் 3க்கு பதிலாக 5 போட்டிகளை விளையாடக்கூடாது?”
பதான் கோரிக்கை:
“நம்மால் ஏன் ஒரு முத்தரப்பு அல்லது நால்தரப்பு தொடரை நடத்தக்கூடாது? நம்மால் அதை ஏன் நடத்த முடியவில்லை? நம்முடைய 2 மகத்தான வீரர்கள் ஒரு ஃபார்மட்டில் மட்டுமே விளையாடுகிறார்கள். ரசிகர்களிடம் அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டின் மேல் மீண்டும் ஆர்வத்தைக் கொண்டு வருவார்கள். அது மட்டுமின்றி அவர்கள் சிறப்பாக விளையாடுவது பெரிய விஷயமாகும்”
இதையும் படிங்க: இன்னும் 25 ரன்கள் போதும்.. சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – விராட் கோலி
“உலகக் கோப்பை தூரத்தில் இருந்தாலும் அவர்கள் அதிகம் விளையாடுவதை நாம் பார்க்க விரும்புவோம். அந்த 2 வீரர்களும் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாட வேண்டும். இந்தியாவுக்காக மட்டுமின்றி அவர்கள் தொடர்ந்து உள்ளூரிலும் விளையாட வேண்டும். ஏனெனில் அதிகமான போட்டிகளில் விளையாடும் போது அவர்கள் இன்னும் சிறப்பாக மாறுவார்கள்” என்று கூறினார்.



