
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று துபாய் சென்றடைந்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில்லுக்கு டி20 துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளதால் அவரே அபிஷேக் சர்மாவுடன் இணைந்து துவக்க வீரராக விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய டி20 அணியின் துவக்க வீரராக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் அவரது இடத்தை இழப்பார் என்று தெரிகிறது.
டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்த மாற்றம் தேவையா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் சுப்மன் கில் துவக்க வீரராக விளையாடுவது நல்லது தான் என்று ஒரு சில முன்னாள் வீரர்கள் ஆதரவும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் துவக்க வீரராக விளையாடுவதால் நமது அணியின் பேலன்ஸ்க்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும் அவராலும் அதிரடி காட்ட முடியும் என்று பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சுப்மன் கில்லின் டி20 ஹிட்டிங் திறன் தற்போது மேலும் மேம்பட்டுள்ளதாக நினைக்கிறேன். அவர் ஐபிஎல் தொடரின் ஆரம்ப சீசன்களில் 125 ஸ்ட்ரைக் ரேட்டுடன் தான் விளையாடி வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் 150 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வருவதோடு ஒவ்வொரு ஆண்டும் 500, 600 ரன்கள் குவிக்கிறார்.
அதனால் நிச்சயம் அவரால் ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தி விளையாட முடியும். ஆசிய கோப்பை தொடரில் அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் டி20 உலக கோப்பையிலும் அவர் அதே இடத்தில் தொடரலாம். இந்திய அணி தற்போது ஸ்ட்ரைக் ரேட்டிற்கு முக்கியத்துவம் வழங்கி டி20 போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை விளையாடி வருகிறது.
இதையும் படிங்க : என்னை மாதிரி மிஸ் பண்ணாம இதை செஞ்சு எஸ்ட்ரா 3000 ரன்ஸ் அடிங்க.. அபிஷேக், கில்லுக்கு யுவி அட்வைஸ்
இந்திய அணியின் இந்த புதிய ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு சுப்மன் கில்லின் பேட்டிங்கும் ஒத்துவரும். அவர் இந்த சோதனையில் எளிதாக வெற்றி பெற்று விடுவார் என இர்ஃபான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.