ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி துவங்குகிறது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இம்முறை அத்தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. அத்தொடரில் ஐசிசி தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலிக்கும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொல்லப்போனால் ஆசியக் கோப்பையை அதிக முறை வென்ற அணியாக இந்தியா ஏற்கனவே சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற அணிகளைக் காட்டிலும் இந்தியாவிடம் உலகத்தரமான வீரர்கள் நிறைந்து இருக்கிறார்கள். மேலும் ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் போன்ற தரமான ஆல் ரவுண்டர்கள் இருப்பது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
துருப்புச்சீட்டு வருண்:
இந்நிலையில் 2025 ஆசியக் கோப்பையில் ஆல் ரவுண்டர்கள் துருப்புச் சீட்டாக இருப்பார்கள் என்று பலரும் நினைப்பதாக முன்னாள் வீரர் இர்பான் தான் தெரிவித்துள்ளார். ஆனால் தம்மைப் பொறுத்த வரை சுழல் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி துருப்புச் சீட்டாக இருப்பார் என்று பதான் கணித்துள்ளார். ஏனெனில் 2021 டி20 உலகக் கோப்பையில் துபாயில் மோசமாக விளையாடிய வருண் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.
அதற்காக மனம் தளராத அவர் ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி 2024இல் கம்பேக் கொடுத்தார். அந்த வாய்ப்பிலும் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அணியில் வாய்ப்பு கிடைத்தது. துபாயில் நடைபெற்ற அத்தொடரில் அபாரமாக செயல்பட்ட வருண் 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
பதான் கணிப்பு:
அப்படி வீழ்ச்சியைச் சந்தித்த அதே துபாயில் வருண் சக்ரவர்த்தி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று எழுச்சி கண்டார். அதே துபாயில் நடைபெறும் 2025 ஆசியக் கோப்பையில் மீண்டும் அவர் துருப்புச்சீட்டாக இருப்பார் என்று தெரிவிக்கும் பதான் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நீங்கள் எப்போதும் ஆல் ரவுண்டர்கள் துருப்புச்சீட்டை கொண்டு வருவார் என்று நினைப்பீர்கள்”
இதையும் படிங்க: விராட் கோலி கொடுத்த அந்த ஆலோசனைகள் தான் என்னோட வளர்ச்சிக்கு காரணம் – ஜிதேஷ் சர்மா பேட்டி
“ஆனால் வருண் சக்கரவர்த்தி எப்படி செயல்படப் போகிறார் என்பதைப் பார்ப்பதற்காக நான் உற்சாகத்துடன் இருக்கிறேன். ஏனெனில் அவரைப் பற்றிய மீட்புக்கதை இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். துபாயில் நடைபெற்ற 2021 உலகக் கோப்பையில் வருண் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. எனவே இம்முறை அவர் மேலே என்னுடைய கண்கள் இருக்கிறது. ஏனெனில் இம்முறை நிறைய தன்னம்பிக்கையைக் கொண்டுள்ள அவர் கண்டிப்பாக துருப்புச்சீட்டாக வருவார்” என்று கூறினார்.



