ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதல் மற்றும் ஐந்தாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட வேளையில் எஞ்சியுள்ள 3 போட்டிகளில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்த இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்திய அணியின் வெற்றிக்கு இவர்தான் கீ பிளேயர் : இர்பான் பதான் பாராட்டு
அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெறவுள்ள வேளையில் அதற்கு முன்னதாக பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அதோடு இளம் வீரர்களையும், அனுபவ வீரர்களையும் கலந்த கலவையாக இருக்கும் இந்த இந்திய அணி இனியும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவிக்கும் என்று பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற சரியான ஆல்ரவுண்டர்களை தேர்ந்தெடுத்து விளையாட வைப்பது தான் என்றும் அதிலும் குறிப்பாக ஷிவம் துபே இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு கீ ப்ளேயர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த டி20 தொடரில் சில மாற்றங்களை இந்திய அணி சரியாக செய்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆல்ரவுண்டர்களின் மீது கவனம் செலுத்தி தொடர்ச்சியாக ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டில் போன்றவர்களை பயன்படுத்தி வருவது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலனையும் கொடுத்துள்ளது.
அதிலும் குறிப்பாக ஷிவம் துபே இந்த ஆஸ்திரேலிய தொடரில் பந்துவீச்சாளராக மிகச் சிறப்பான திறனை வெளிக்கொணர்ந்துள்ளார். கடந்த சில தொடர்களாகவே அவர் பந்துவீச்சில் கண்டுள்ள முன்னேற்றம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலனை அளித்துள்ளது. ஹார்டிக் பாண்டியா காயமடைந்துள்ள வேளையில் ஷிவம் துபே இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்,
இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடர் முடிந்த கையோடு வாஷிங்டன் சுந்தருக்கு கிடைத்த – ஸ்பெஷல் பரிசு
இந்த தொடரில் என்னை பொறுத்தவரை இந்திய அணியின் வெற்றிக்கு கீ பிளேயர் என்றால் அது ஷிவம் துபே தான் என்று இர்பான் பதான் பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலிய தொடரை கைப்பற்றிய கையோடு நாடு திரும்பியுள்ள இந்திய அணியானது அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.



