
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களும், நட்சத்திர வீரர்களுமான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்த 2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாடுவார்களா? என்பதே தற்போது பெரிய அளவில் பேசப்படும் விடயமாக இருந்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வை அறிவித்த வேளையில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
இதன் காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை அவர்களால் அணியில் நீடிக்க முடியுமா? அல்லது வயது முதிர்வை காண்பித்து அணியின் நிர்வாகம் அவர்களை நீக்கிவிடுமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றன. அதுகுறித்த விவாதங்களும் சமூக வலைதளத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது.
அதோடு கடந்த சில நாட்களாக பலரும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது எதிர்காலம் குறித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் கூறுகையில் :
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்த 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாடுகிறார்களா? மாட்டார்களா? என்பதை விடுத்து அவர்கள் தற்போது விளையாடி வரும் கிரிக்கெட்டை ரசித்து பாருங்கள். ஏனெனில் இருவருமே தற்போது நல்ல மனநிலையுடன் தங்களது ஆட்டத்தை ரசித்து விளையாடி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியின் போது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த அவர்கள் 100 ரன்களுக்கு மேல் சேர்த்து நல்ல அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர்.
இதையும் படிங்க : அவங்க 2 பேரும் ஓகே சொல்ல மாட்டாங்க.. இருந்தாலும் நீங்க ரோஹித் கோலி கிட்ட கேளுங்க – முகமது கைப் வேண்டுகோள்
அதேபோன்று விராட் கோலி தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் விளையாடி வருகிறார். அவர் தனது கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் ரசித்து விளையாடுகிறார். எனவே அவரை அவரது வழியில் விடுங்கள். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தற்போதுள்ள பார்மிற்கு அடுத்த உலக கோப்பையில் விளையாடலாம் என்று நான் கூறுவேன் என இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.