இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து முகமது ஷமி கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்டுள்ளார். கடைசியாக 2023 உலகக் கோப்பையில் லேசான காயத்துடன் அபாரமாக பந்து வீசிய அவர் இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் பின் காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரால் 2024/25 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரை விளையாட முடியவில்லை.
இறுதியாக குணமடைந்த ஷமி ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடி 8 விக்கெட்டுகளை எடுத்து இந்தியா கோப்பையை வெல்ல தம்முடைய பங்காற்றினார். ஆனால் அப்போதிலிருந்து இதுவரை அவருக்கு மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது பற்றி கேட்டதற்கு ஃபிட்டாக இல்லாத காரணத்தாலேயே ஷமி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.
கேரியர் முடியல:
மறுபுறம் ரஞ்சிக் கோப்பை, விஜய் ஹசாரே, சயீத் முஸ்டாக் அலி ஆகிய 3 விதமான உள்ளூர் தொடர்களிலும் பெங்கால் அணிக்காக விளையாடிய ஷமி நிறைய விக்கெட்டுகள் எடுத்து தன்னுடைய ஃபிட்னஸையும் தரத்தையும் நிரூபித்தார். ஆனாலும் தொடர்ந்து அவரை புறக்கணிக்கும் தேர்வுக்குழு அடுத்து நடைபெறும் நியூசிலாந்து தொடரிலும் தேர்ந்தெடுக்கவில்லை. அதனால் அவருடைய இந்திய கேரியர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் 400 – 500 விக்கெட்டுகளை எடுத்துள்ள ஷமியின் இந்திய கேரியர் இன்னும் முடிந்துவிடவில்லை என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டை போல 2026 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் ஷமி கம்பேக் கொடுப்பது நிச்சயம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முகமது ஷமி மிகப்பெரிய பேசு பொருளாகியுள்ளார்”
பதான் நம்பிக்கை:
“அவருடைய வருங்காலம் என்ன? 450 – 500 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்த அவர் ஒன்றும் நேற்று அறிமுகமாகி சில போட்டிகளில் விளையாடிவிட்டு சென்றவர் அல்ல. அவரது விக்கெட்டுகள் பெரியது. 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த ஒருவரை நீக்கிவிட்டு அவரது ஃபிட்னஸை கேள்வி எழுப்புவது பெரும்பாலான வீரர்களுக்கு நடக்கக்கூடிய ஒன்றாகும். கிரிக்கெட்டில் விளையாடும் வரை நீங்கள் உங்களை தொடர்ந்து நிரூபிக்க வேண்டும். உள்ளூரில் 200 ஓவர்கள் வீசியுள்ள அவருடைய ஃபிட்னெஸ் காண்பிக்கப்பட்டுள்ளது”
இதையும் படிங்க: என்னையா டீம்ல எடுக்கல.. இங்க பாருங்க என்னோட ஆட்டத்தை.. மிரள வைத்த சஞ்சு சாம்சன் – விவரம் இதோ
“இருப்பினும் அவரைப் பற்றி தேர்வுக்குழு என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஒருவேளை நான் ஷமியாக இருந்தால் ஐபிஎல் தொடரில் விளையாடி திரும்பிப் பார்க்க வைப்பேன். ஐபிஎல் தொடரில் உங்களுடைய பழைய ஃபார்ம், ஃபிட்னஸ் ஆகியவற்றை நிரூபித்தால் யாராலும் உங்களை புறக்கணிக்க முடியாது. ஏனெனில் மொத்த உலகமும் ஐபிஎல் தொடரை பார்க்கும். அங்கே நீங்கள் அசத்தினால் மீண்டும் அணியில் வர முடியும். எனவே ஷமிக்கான கதவுகள் இன்னும் மூடப்படவில்லை” எனக் கூறினார்.



