ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஜுன் ஐந்தாம் தேதி நியூயார்க் நகரில் அயர்லாந்தை சந்திக்கிறது. அதற்கு முன்பாக அதே மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் வங்கதேசத்தை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா எளிதான வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியில் இந்திய அணியில் நிலவிய சில குழப்பங்கள் தீர்ந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக 1 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த சஞ்சு சாம்சனை விட ரிஷப் பண்ட் 53* ரன்கள் விளாசி வெற்றியில் பங்காற்றினார். எனவே அவர் விக்கெட் கீப்பராக விளையாடுவது உறுதியானது. அதே போல ஆல் ரவுண்டர்களான பாண்டியா மற்றும் சிவம் துபே ஆகியோர் பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்து தரத்தை காண்பித்தனர்.
பதான் லெவன்:
இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டிக்கான தனது இந்திய கிரிக்கெட் அணியின் பிளேயிங் லெவனை இர்பான் பதான் தேர்வு செய்துள்ளார். அதில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அவர் விராட் கோலியை ஓப்பனிங் ஜோடியாக தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் 2024 தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல ஃபார்மில் இருப்பதால் விராட் கோலியை அவர் துவக்க வீரராக தேர்ந்தெடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து 3வது இடத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அவர் தேர்வு செய்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 3வது இடத்தில் களமிறங்கி ரிஷப் பண்ட் 53* (32) ரன்கள் அடித்து அசத்தியதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ், 5வது இடத்தில் சிவம் துபே, 6வது இடத்தில் ஹர்திக் பாண்டியா ஆகியோரை பதான் தேர்ந்தெடுத்துள்ளார்.
அதன் பின் ரவீந்திர ஜடேஜாவை மூன்றாவது ஆல் ரவுண்டராக தேர்ந்தெடுத்துள்ள அவர் குல்தீப் யாதவை முதன்மை ஸ்பின்னராக தேர்வு செய்துள்ளார். இறுதியாக வேகப்பந்து வீச்சு துறையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமத் சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் போட்டிகளில் அர்ஷ்தீப் அல்லது சிராஜுக்கு பதிலாக அக்சர் படேல் விளையாட வேண்டும் என்றும் அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கூறினார்.
இதையும் படிங்க: என்ன அநியாயம்.. எல்லாமே இந்தியாவுக்கு சாதகமா இருக்கு.. இங்கிலாந்தின் விஸ்டன் விமர்சனத்துக்கு வாசிம் ஜாபர் பதிலடி
அவருடைய இந்திய அணி இதோ: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (கீப்பர்), சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்



