தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. அதனால் 15 வருடங்கள் கழித்து இந்தியா தங்கள் சொந்த மண்ணில் தெனாப்பிரிக்காவிடம் டெஸ்ட் போட்டியில் தோற்றது. இத்தனைக்கும் அப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 30 ரன்கள் முன்னிலை பெற்றதால் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் சுழலுக்கு அதீத சாதகமாக மாறிய கொல்கத்தா பிட்ச்சில் வெறும் 124 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா அவமானத் தோல்வியை சந்தித்தது. முன்னதாக அப்போட்டியில் அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் தடுமாற்றமாக விளையாடி விக்கெட்டை இழந்தனர். அப்போது கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல் அதிரடியாக 29 (17) ரன்கள் எடுத்தது போராடி அவுட்டானார்.
மறைந்து போன கலை:
அப்படி இன்னும் சில பேட்ஸ்மேன்கள் அதிரடியாக 20 – 30 ரன்கள் எடுத்திருந்தால் இந்தியா எளிதாக வென்றிருக்கும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற கலையை இப்போதெல்லாம் இந்திய பேட்ஸ்மேன்கள் மறந்து விட்டதாகவும் அவர் கவலைத் தெரிவித்துள்ளார். இது பற்றி பதான் பேசியது பின்வருமாறு.
“அந்தப் போட்டியை பார்த்த எனக்கு பேட்டிங் அணுகுமுறை ஆக்ரோசமாக மாற வேண்டும் என்று தோன்றியது. ஏனெனில் இது போன்ற பிட்ச்களில் நானும் விளையாடியுள்ளேன். இந்தியாவில் நடக்கும் 100 டெஸ்ட் போட்டிகளில் சுமார் 30 போட்டிகள் இப்படித்தான் இருக்கும். இதை என்னுடைய அனுபவத்தை வைத்து சொல்கிறேன்”
பதான் கவலை:
“அதாவது உங்களுக்கு வெற்றிக்கு கடைசி இன்னிங்சில் 125 ரன்கள் தேவைப்பட்டால், உங்களுடைய டாப் 7 பேட்ஸ்மேன்களில் குறைந்தபட்சம் இருவர் நேர்மறையாக சிந்தித்து ஸ்ட்ரைக்கை மாற்றி பவுலர்கள் மேலே அழுத்தத்தைப் போட்டு பார்ட்னர்ஷிப் அமைத்தால் போட்டி முடிந்து விடும். அக்சர் பட்டேல் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அவுட்டான போதிலும் 29 ரன்கள் எடுத்தார். அவரைப் போல இன்னும் சில பேட்ஸ்மேன்கள் விளையாடியிருந்தால் 125 இலக்கை எளிதாக தொட்டிருக்கலாம்”
“ஏனெனில் நாம் 30 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றோம். ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் மென்மையான கைகளுடன் விளையாடும் திறன் வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு காலத்தில் நாம் உலகிலேயே ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் மாஸ்டராக இருந்தோம். ஆனால் அந்தக் கலை தற்போது கிட்டத்தட்ட மறந்து விட்டது”
இதையும் படிங்க: தெ.ஆ அணியிடமும் இந்த பதிலடி பவர் இருக்கு.. இந்தியாவை ஒய்ட்வாஷ் செய்வோம்.. கோச் சுக்ரி பேட்டி
“இப்போதெல்லாம் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு உகந்த பிட்ச்களில் விளையாடுவதால் சுழல் பந்துகளை எதிர்கொள்ளும் திறன் குறைந்து விட்டது. சுப்மன் கில் காயத்தால் விளையாட மாட்டார் என்ற சூழ்நிலையில் நாம் நமது அணுகுமுறையை மாற்றியிருக்க வேண்டும். அதிகப்படியான தடுப்பாட்டத்தை விளையாடினால் 1, 2வது பந்தில் இல்லாவிட்டாலும் 3வது பந்தில் உங்களுடைய பெயர் விக்கெட்டாக எழுதப்படும்” என்று கூறினார்.



