இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 15 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் ஒரு போட்டியில் வென்று சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா தங்களை உலக டெஸ்ட் சாம்பியன் என்பதை நிரூபித்தது. இத்தனைக்கும் அப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் முன்னிலை பெற்றதால் தென்னாப்பிரிக்கா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2வது இன்னிங்ஸில் சுழலுக்கு அதீத சாதகமாக மாறிய பிட்ச்சில் வெறும் 124 ரன்களை வைத்தே இந்தியாவை தோற்கடித்த தென்னாப்பிரிக்கா வரலாற்று வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இந்தியா சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைத்து தங்களை தோற்கடிக்க முயற்சித்தால் பதிலடி கொடுப்பதற்கான பவர் தென்னாபிரிக்காவிடம் இருப்பதாக பயிற்சியாளர் சுக்ரி கோர்னாட் தெரிவித்துள்ளார். ஏனெனில் தங்களிடமும் கேசவ் மகாராஜ், சேனுரான் முத்துசாமி, சைமன் ஹார்பர் ஆகிய தரமான ஸ்பின்னர்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஒய்ட்வாஷ் செய்வோம்:
அடுத்ததாக கௌகாத்தியில் நடைபெறும் 2வது போட்டியில் பிட்ச் எப்படி இருந்தாலும் அதை சமாளித்து இந்தியாவை தோற்கடித்து ஒயிட்வாஸ் செய்து இத்தொடரின் கோப்பையை வெல்வோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சுக்ரி பேசியது பின்வருமாறு. “இந்திய துணைக்கண்டத்திற்கு நாங்கள் தரமான ஸ்பின்னர்களுடன் வந்ததற்காக சிலிர்க்கிறோம்”
“இது மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் எங்களுடைய ஸ்பின் பவுலர்கள் மேலே நம்பிக்கையைக் காட்டத் துவங்க வேண்டும். இது எங்களுடைய விளையாட்டில் ஆச்சரியங்களை நிகழ்த்தும். ஏனெனில் இந்த வெற்றி எங்கள் இளம் வீரர்கள் ஸ்பின்னர்களாக வருவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கும். நாங்கள் வேகப்பந்து வீச்சுக்கு பிரபலமான தேசமாக மட்டும் இருக்க விரும்பவில்லை”
பயிற்சியாளர் நம்பிக்கை:
“இதற்கு முன் இந்தியாவுக்கு வந்த போது எங்களுக்கு கருப்பான அனுபவங்கள் கிடைத்தன. நிறைய அணிகள் கொண்டிருக்கும் திறமை எங்களிடம் இல்லாவிட்டாலும், அந்த திறமையை இன்னும் நாம் பயன்படுத்தவில்லை என்ற மனநிலையை இப்போது பெற்றுள்ளோம். லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் பெற்ற வெற்றிக்கு நிகராக கொல்கத்தாவில் கிடைத்த வெற்றியும் இருக்கும்”
இதையும் படிங்க: ஒரே வருடத்தில் 4 தோல்வி.. இனியாச்சும் கிங் கோலி ரூட்டை கம்பீர் ஃபாலோ பண்ணனும்.. வாசிம் ஜாபர் அட்வைஸ்
“நாங்கள் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை. எங்கள் அணிக்காக பெருமைப்படுகிறேன். ஒரு அணியாக இந்த வெற்றி எங்களுடைய மனதை மாற்றி வருங்காலத்தில் அற்புதங்களை நிகழ்த்தும். கடந்த மாதம் பாகிஸ்தானில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற நாங்கள் தற்போது இங்கே வென்றுள்ளோம். ஆனால் எங்கள் வேலை இன்னும் முடியவில்லை. நாங்கள் ஒரு டெஸ்ட் போட்டியை மட்டும் வெல்வதற்காக வரவில்லை தொடரை வெல்ல வந்துள்ளோம். கௌகாத்தியில் இருக்கக்கூடிய சவால்களை நாங்கள் சமாளிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று கூறினார்.



