இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட்டின் பரம எதிரிகளாக பாவிக்கப்படுகின்றன. அதனால் வெற்றி பெறுவதற்கு அவ்விரு அணிகளுக்கு இடையே அனல் பறக்கும் போட்டி நடைபெறுவது வழக்கமாகும். அதே போல இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் வெற்றிகளைப் பெறுவதற்காக களத்தில் பலமுறை அனல் பறக்கும் வகையில் மோதலில் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த வகையில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடிக்கும் இந்திய வீரர் இர்பான் பதானுக்கும் களத்தில் அனல் பறக்கும் போட்டிகள் நடந்துள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக மொத்தம் 807 ரன்கள் அடித்துள்ள பதான் 67 விக்கெட்டுகள் எடுத்து மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக லாலா என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடும் அப்ரடியை மட்டும் அவர் 11 முறை அவுட்டாக்கியுள்ளார்.
கலாய்த்த அப்ரிடி:
அதிலும் குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் அவரை கோல்டன் டக் அவுட்டாக்கிய பதான் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஷாஹித் அப்ரிடி ஒருமுறை தம்மை போலியான பதான் என்று சொன்னதாக இர்பான் பதான் கூறியுள்ளார். அதனால் களத்தில் அவரை அவுட்டாக்கி யார் உண்மையான பதான் என்பதை நிரூபித்ததாகவும் இர்பான் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அப்ரிடியை 11 முறை அவுட்டாக்கியுள்ளேன். அவருடன் நான் வித்தியாசமான சண்டையைக் கொண்டிருந்தேன். ஏனெனில் இந்திய அணியில் நான் இளம் வீரராகவும் புதிய வீரராகவும் வந்திருந்தேன். அந்த காலங்களில் ஹர்ஷா போக்லே அப்ரிடியை ஒரு பேட்டி எடுத்தார்”
உண்மையான பதானின் பதிலடி:
“அந்த பேட்டியில் நான் தான் உண்மையான பதான், அவர் போலியான பதான் என்று என்னைப் பற்றி அப்ரிடி சொன்னார். அப்போது அவர் என்னை மட்டுமின்றி எங்களுடைய பதான் சமூகம் குறித்தும் பேசுகிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அப்படி அவர் என்னிடம் மோதியதால் அவரை எப்படியாவது அவுட்டாக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் உண்டானது”
இதையும் படிங்க: வாளை பொறுமையா சுத்துங்க ஜடேஜா.. நீங்க அந்த கிரேட்டஸ்ட் சாதனை படைக்கனும்.. வாழ்த்திய பிரட் லீ
“அதே வேகத்துடன் செயல்பட்டு அவரை 11 முறை அவுட்டாக்கிய நான் அவரிடம் யார் உண்மையான பதான் என்பதை காண்பித்தேன். அவரை பெரிய தொடர்களில் அவுட்டாக்கியுள்ளேன். ஒருமுறை தொடரை தீர்மானிக்கும் போட்டியில் அவரது விக்கெட்டை எடுத்தேன். இன்னொரு தருணத்தில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் அவரை அவுட்டாக்கினேன்” என்று கூறினார்.



