
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ஓய்வுக்குப்பின் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் 2025 ஐபிஎல் தொடருக்கான வர்ணனையாளர் குழுவிலிருந்து அவரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. அதற்கு நேரலையில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற நட்சத்திர இந்திய வீரர்களை தனிப்பட்ட முறையில் அவர் விமர்சித்ததே காரணமானதாக செய்திகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வீரர்கள் சிறப்பாக விளையாடினால் பாராட்டுவதும் தடுமாற்றமாக விளையாடினால் விமர்சிப்பதும் வர்ணனையாளர்கள் வேலை என்று இர்ஃபான் பதான் கூறியுள்ளார். அதை செய்ததற்காக தாம் ஐபிஎல் வர்ணனையாளர்கள் குழுவிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் 2012ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவின் திறமையை ஹைதராபாத் அணியில் முக்கிய பொறுப்பிலிருந்த விவிஎஸ் லக்ஷ்மனிடம் சொன்னதாகவும் பதான் கூறியுள்ளார்.
ஒருவேளை லக்ஷ்மன் அதை ஏற்றிருந்தால் மும்பைக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா இந்நேரம் ஹைதராபாத் அணிக்கு விளையாடியிருப்பார் என்றும் பதான் தெரிவித்துள்ளார். பாண்டியா, ஹூடா போன்ற வீரர்கள் வளர்வதற்கு உதவியத் தாம் தனிப்பட்ட முறையில் அவர்களை விமர்சிப்பதில்லை என்றும் பதான் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உங்களை நான் 14க்கு 7 போட்டிகளில் விமர்சிப்பது கூட மென்மையானது”
“அதுவே வர்ணனையாளர்களாக எங்களுடைய வேலை. களத்தில் விளையாடும் வீரர்களுக்கும் எங்களுக்கும் எந்த போட்டியும் கிடையாது. உண்மையில் தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, ஹர்டிக் பாண்டியா போன்ற பரோடா வீரர்களால் இர்பான் – யூசுப் பதான் தங்களுக்கு உதவி செய்யவில்லை என்று சொல்ல மாட்டார்கள். 2012இல் என்னுடைய பேச்சுக்களைக் கேட்டு ஹர்திக் பாண்டியாவை வாங்காமல் விட்டதை விவிஎஸ் லக்ஷ்மன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலையில் ஒப்புக்கொண்டார்”
“ஒருவேளை லக்ஷ்மன் அவரை எடுத்திருந்தால் இந்நேரம் பாண்டியா ஹைதராபாத் அணிக்காக விளையாடியிருக்கக்கூடும். வீரர்களை நீங்கள் விமர்சிப்பதில் எந்த தவறும் கிடையாது. நீங்கள் விளையாடினால் விமர்சனங்களை சந்தித்தாக வேண்டும். விமர்சனங்களை சுனில் கவாஸ்கர் கிரேட் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் சந்தித்துள்ளார்கள்”
இதையும் படிங்க: 21 வயதில் கேப்டன்.. 138 வருட சாதனையை உடைக்கப் போகும் இங்கிலாந்து வீரர்.. வெளியான அறிவிப்பு
“அவர்கள் கிரிக்கெட்டை விட தங்களை பெரியவர்கள் என்று எப்போதும் உணர விட்டதில்லை. ஆனால் பாண்டியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தரக்குறைவான வார்த்தைகளுக்கு நான் எதிரானவன்” என்று கூறினார். இதற்கிடையே ரோகித் சர்மாவும் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் கேப்டனாக இல்லாமல் போனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே ரோஹித் தகுதியற்றவர் என்று பதான் விமர்சித்த காரணத்தையும் விளக்கியது குறிப்பிடத்தக்கது.