SL vs IRE : இலங்கையை அதன் சொந்த மண்ணில் அதிர விட்ட அயர்லாந்து – டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சம் தொட்டு பெரிய சாதனை

- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏப்ரல் 16ஆம் தேதி துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்ட இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஏப்ரல் 24ஆம் தேதி கால்லே மைதானத்தில் துவங்கியது.

அதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜேம்ஸ் மெக்கோலும் 10, பிஜே மூர் 5, ஹரி டெக்டர் 18 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே இலங்கையின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 89/3 என்ற தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஆண்ட்டி பால்பரின் மற்றும் பால் ஸ்டெர்லிங் ஆகிய 2 அனுபவ வீரர்கள் தங்களது அனுபவத்தை காட்டும் வகையில் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்தனர்.

- Advertisement -

சாதனை ஸ்கோர்:
குறிப்பாக சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இலங்கை பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அரை சதம் கடந்த அந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை முழுமையாக மீட்டெடுத்தது. அந்த வகையில் 24வது ஓவரில் இணைந்து 68வது ஓவர் வரை நிலைத்து நின்று அசத்தலாக செயல்பட்ட இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது சதத்தை நெருங்கிய கேப்டன் பால்பரின் 14 பவுண்டரியுடன் 95 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

அடுத்து களமிறங்கிய லார்கன் டுக்கர் சற்று அதிரடியாக விளையாடி 4வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 10 பவுண்டரியுடன் 80 (106) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய பால் ஸ்டெர்லிங் 9 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 103 (181) ரன்கள் குவித்து அவுட்டாக அடுத்து வந்த குர்ட்டில் கேம்பர் இலங்கைக்கு தொல்லை கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்தார்.

- Advertisement -

குறிப்பாக டெயில் எண்டர் மெக்பிரின் 35 (59) ரன்கள் அடித்து கை கொடுத்ததை பயன்படுத்திய அவர் 15 பவுண்டரி 2 சிக்ஸருடன் அபாரமான சதமடித்து 111 (229) ரன்கள் குவித்து அயர்லாந்து 450 ரன்கள் தாண்டுவதற்கு உதவி அவுட்டானார். அப்படி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல ரன்களை எடுத்ததால் அயர்லாந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 492 ரன்கள் குவித்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளும் விஸ்வா பெர்னாண்டோ மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அப்படி முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தும் சுழலுக்கு சாதகமான இலங்கையில் 2வது போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து 492 ரன்கள் குவித்த அயர்லாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தை பெற்ற அயர்லாந்து 2018இல் பாகிஸ்தானுக்கு எதிராக டப்லின் நகரில் நடைபெற்ற போட்டியில் 339 ரன்கள் எடுத்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும்.

இதையும் படிங்க:GT vs MI : பெட்டி பாம்பாக அடங்கி மோசமாக தோற்றும் சென்னைக்கு கைகொடுத்த மும்பை – குஜராத் மிரட்டல் வெற்றி

தற்போது 5 வருடங்கள் கழித்து அதை தாண்டியுள்ள அயர்லாந்து வரலாற்றிலேயே முதல் முறையாக 400 ரன்களை கடந்து புதிய சாதனை ஸ்கோரை பதிவு செய்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதை தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இலங்கை 2வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 81/0 ரன்கள் எடுத்து பதிலடி கொடுத்து வருகிறது. அந்த அணிக்கு களத்தில் கேப்டன் கருணரத்னே 39* (45) ரன்களும் மதுஸ்கா 41* (64) ரன்களும் எடுத்து விளையாடி வருகிறார்கள்.

Advertisement