எப்படி இருந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு இன்னைக்கு இப்படி ஒரு நிலையா? – சூப்பர் 12 சுற்றை இழந்த பரிதாபம்

- Advertisement -

அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கிய 2022 ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றில் விளையாடப் போகும் கடைசி 4 அணிகளை தீர்மானிக்கும் முதல் சுற்று இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. அதில் குரூப் ஏ பிரிவில் அமீரகம் மற்றும் நமீபியா ஆகிய அணிகள் ஏற்கனவே வெளியேறிய நிலையில் ஆசிய சாம்பியன் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றன. அந்த நிலையில் குரூப் பி பிரிவிலிருந்து தகுதி பெறும் கடைசி 2 அணிகளை தீர்மானிக்கும் 2 போட்டிகள் அக்டோபர் 21ஆம் தேதியான இன்று ஹோபார்ட் நகரில் துவங்கியது. அதில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின.

இவ்விரு அணிகளுமே தங்களது முதலிரண்டு போட்டிகளில் தலா 1 வெற்றி தோல்வியை பதிவு செய்ததால் இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. அந்த நிலைமையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் சுமாராக செயல்பட்டு 20 ஓவர்களில் 146/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் கெய்ல் மேயர்ஸ் 1 (5) ஜான்சன் சார்லஸ் 24 (18) எவின் லெவிஸ் 13 (18) கேப்டன் நிக்கோலஸ் பூரன் 13 (11) ரோவ்மன் போவல் 6 (8) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக பிரண்டன் கிங் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 62* (48) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ஒரு காலத்துல ராஜா:
அவருடன் ஓடென் ஸ்மித் கடைசி நேரத்தில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 19* (12) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுக்க அயர்லாந்து சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக கெராத் டிலானி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 147 ரன்களை துரத்திய அயர்லாந்துக்கு ஆரம்பத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை செட்டிலாக விடாமல் சரவெடி பேட்டிங்கை துவக்கிய தொடக்க வீரர்கள் பால் ஸ்டெர்லிங் மற்றும் கேப்டன் ஆண்டி பால்பியன் ஆகியோர் 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார தொடக்கம் கொடுத்தனர்.

அதில் கேப்டன் பால்ப்ரின் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 37 (23) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அடித்து நொறுக்கிய நட்சத்திர வீரர் பால் ஸ்டெர்லிங் அரைசதம் அடித்து 6 பவுண்டரி 2 சிக்சருடன் கடைசி வரை அவுட்டாகாமல் 66* (48) ரன்கள் குவித்தார். அவருடன் 3வது இடத்தில் களமிறங்கி அசத்திய டூக்கர் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 45* (35) ரன்கள் விளாசி ஃபினிசிங் கொடுத்ததால் 17.3 ஓவரிலேயே 150/1 ரன்கள் எடுத்த அயர்லாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த வாழ்வா – சாவா போட்டியில் முதலில் பந்து வீச்சில் கட்டுக்கோப்பாக செயல்பட்ட அந்த அணி பேட்டிங்கிலும் பதறாமல் செயல்பட்டு 2 உலகக் கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸை இந்த உலகக் கோப்பையிலிருந்து நாக் அவுட் செய்து சூப்பர் 12 சுற்றுக்கு 3வது அணியாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. மறுபுறம் சமீப காலங்களில் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் திண்டாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் டி20 உலகக் கோப்பையில் வெற்றிகரமான அணியாக இருந்தாலும் தரவரிசையில் கீழே இருப்பதால் நேரடியாக சூப்பர் 12க்கு தகுதி பெறாமல் இப்படி கத்துக்குட்டிகளுடன் பலப்பரீட்சை நடத்தியது.

ஆனால் நமீபியா, அயர்லாந்து போன்ற சிறிய அணிகளுக்கு எதிராக கூட செல்லுபடியாகாத ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி பங்கேற்ற 3 போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்தது. அதனால் இந்த உலகக் கோப்பையில் ஆரம்பத்திலேயே வெளியேறியுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீட்டுக்கு செல்வதற்காக விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுள்ளது அந்நாட்டவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இப்போதும் ரசல், நரேன் போன்ற வீரர்கள் இருந்தும் அவர்கள் நாட்டுக்காக முன்னுரிமை கொடுக்காமல் பணத்துக்காக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவது இந்த நிலைமைக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : டி20 உ.கோ முடிந்ததும் இந்தியா களமிறங்கும் 2 புதிய கிரிக்கெட் தொடர் – எங்கே, எப்போது, முழு அட்டவணை இதோ

மொத்தத்தில் ஒரு காலத்தில் கெயில், பொல்லார்ட், ப்ராவோ என ராஜாவாக மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் இப்படி சூப்பர் 12 சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளது அனைத்து ரசிகர்களுக்குமே அதிர்ச்சியாகவே அமைந்துள்ளது. அதே சமயம் வரலாற்று வெற்றியை பதிவு செய்த அயர்லாந்து சூப்பர் 12 சுற்றில் எந்த பிரிவுக்கு செல்லப் போகிறது என்பதை தற்போது நடைபெறும் ஜிம்பாவே – ஸ்காட்லாந்து அணிகள் மோதும் போட்டி தீர்மானிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement