ஐபிஎல் 2022 தொடருக்காக அசத்தலான இளம் வெளிநாட்டு பவுலரை வாங்கிய சிஎஸ்கே ! சூப்பர் பிளான்

CSK
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்வித்த பின்வரும் மே 29-ஆம் தேதி பைனலுடன் நிறைவுக்கு வருகிறது. இந்த வருடத்துக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய 2 அணிகளுடன் சேர்த்து மொத்தம் 10 அணிகள் பங்கு பெறுவதால் வழக்கமான 60 போட்டிகளுக்கு பதிலாக 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் இந்த வருடம் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.

இதில் வரும் மார்ச் 26 – மே 22ஆம் தேதி வரை நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த லீக் சுற்றுப் போட்டிகள் வழக்கமாக நடைபெறும் 7 – 8 நகரங்களுக்கு பதிலாக மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது.

- Advertisement -

பயிற்சியை தொடங்கிய நடப்பு சாம்பியன்:
இந்த தொடரில் பங்குபெறும் 10 அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் எத்தனை கோப்பைகளை ஒரு அணி வென்றுள்ளது என்பதன் அடிப்படையில் இந்தப் பிரிவுகள் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 5 முறை கோப்பையை வென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் குரூப் ஏ பிரிவில் முதல் அணியாக இடம் பெற்றுள்ளது.

அதேபோல் 4 முறை சாம்பியன் பட்டம் வென்று 2-வது வெற்றிகரமான அணியாக விளங்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் குரூப் பி பிரிவில் முதல் அணியாக இடம் பிடித்துள்ளது. கடந்த வருடம் துபாயில் நடந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட அந்த அணி இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன் காரணமாக நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்த வருட ஐபிஎல் தொடரில் களமிறங்கும் அந்த அணி கோப்பையை தக்க வைத்துக்கொள்ள முழுமூச்சுடன் போராட உள்ளது. ஐபிஎல் தொடங்க இன்னும் 15 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில் கோப்பையை தக்க வைப்பதற்காக எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் குஜராத் மாநிலம் சூரத் நகரில் முன்கூட்டியே தீவிர வலை பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

- Advertisement -

அசத்தலான அயர்லாந்து பவுலர்:
இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்பதற்காக அயர்லாந்தைச் சேர்ந்த 22 வயது நிரம்பிய இளம் வேகப்பந்து வீச்சாளர் “ஜோஷ் லிட்டில்” சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த போதிலும் ஆரம்ப காலங்களில் தடுமாறி வந்த அவர் சமீப காலங்களாக மிகச் சிறப்பாக பந்து வீச துவங்கியுள்ளார்.

இதுவரை 34 டி20 போட்டிகளில் அயர்லாந்துக்கு விளையாடியுள்ள அவர் அதில் 31 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல் 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். குறிப்பாக சமீபத்தில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் அபாரமாக பந்துவீசிய அவர் அயர்லாந்து அணி இறுதிப்போட்டியில் விளையாட முக்கிய பங்காற்றினார். அந்த உலகக் கோப்பை தகுதி சுற்றில் அவர் 5 போட்டிகளில் 7 விக்கெட்களை 5.85 என்ற மிகச் சிறப்பான எக்கனாமியில் எடுத்துள்ளார்.

பாராட்டிய அயர்லாந்து:
ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலை பயிற்சி பந்துவீச்சாளராக செயல்பட உள்ளார். எம்எஸ் தோனி தலைமையில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி உட்பட பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளார்கள்.

எனவே அவர்களுடன் இணைந்து பணியாற்றி சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் சிறந்து விளங்குவதற்கான அனுபவங்களை அவர் கற்றுக் கொள்ள இந்த முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை அணியுடன் இணைந்து பணியாற்ற உள்ள “ஜோஸ் லிட்டில்” க்கு இந்த அனுபவம் மிகவும் உதவியாக இருக்கும் என அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் மனதார பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement