69 ரன்ஸ்.. 2வது முறை.. வெற்றி பெற்ற தெ.ஆ அணிக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்த அயர்லாந்து

- Advertisement -

அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 7ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவர்களில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 284-9 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு துவக்க வீரர்கள் ஆண்டி பால்பிரின் 45, கேப்டன் பால் ஸ்டெர்லிங் 88 ரன்கள் குவித்து 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் ஹேரி டெக்டர் அதிரடியாக 60 (48), குர்ட்டிஸ் கேம்பர் 34, லார்கன் டுக்கர் 26 ரன்கள் எடுத்து அசத்தினர். தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக லிசாத் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

அசத்திய அயர்லாந்து:

அதைத்தொடர்ந்து 285 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ரியான் ரிக்கல்ட்டன் 4, ரிசா ஹென்றிக்ஸ் 1, கேப்டன் வேன் டெர் டுஷன் 3 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 10-3 என ஆரம்பத்திலேயே திணறிய தென்னாப்பிரிக்காவுக்கு மிடில் ஆர்டரில் கெய்ல் வேர்ரின் 38, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 20, ஆண்டிலோ பெலுக்வியோ 23 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

இருப்பினும் ஜேசன் ஸ்மித் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடி 91 (93) ரன்கள் குவித்து போராடி அவுட்டானார். ஆனால் மற்ற வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த அயர்லாந்து 46.1 ஓவரில் தெனாப்பிரிக்காவை 215 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அதனால் 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அயர்லாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் தெனாப்பிரிக்காவுக்கு எதிராக 2வது முறையாக வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

- Advertisement -

2வது வரலாற்று வெற்றி:

கடந்த 2007 முதல் இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அயர்லாந்து 11 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 8 தோல்விகளை சந்தித்துள்ள அயர்லாந்து வரலாற்றில் 2வது முறையாக வெற்றியைப் பெற்றுள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. அந்த அணியின் இந்த வரலாற்று வெற்றிக்கு அதிகபட்சமாக கிரைக் எங், கிரஹாம் ஹும் தலா 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினர்.

இதையும் படிங்க: இதெல்லாம் தேவையா? ஏபி டீ வில்லியர்ஸை கலாய்த்த பார்திவ் படேலுக்கு.. ஆர்சிபி ரசிகர்கள் பதிலடி

இதே சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த டி20 தொடரில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்ற அயர்லாந்து 1 – 1 (2) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது. இருப்பினும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வென்றது. அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் அயர்லாந்துக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா வென்றது. ஆனாலும் கத்துக்குட்டியாக கருதப்படும் அயர்லாந்து இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்து ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement