அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து மகளிரணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. பெல்பாஸ்ட் நகரில் செப்டம்பர் 7ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதே மைதானத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 320-8 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக டம்மி பியூமோண்ட் 150* ரன்கள் எடுத்தார். ஆனால் 321 ரன்களை துரத்திய அயர்லாந்தை வெறும் 45 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி இங்கிலாந்து தெறிக்க விட்டது. அதனால் அயர்லாந்து அணி மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து அவமான சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2001ஆம் ஆண்டு டப்லின் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே அயர்லாந்தின் முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராகும்.
அவமான தோல்வி:
அந்த அணிக்கு 10 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அதிகபட்சமாக உணா ரேமண்ட் 22 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கேட் கிராஸ் 3, லாரென் பிலர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனால் 275 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.
இதற்கு முன் கடந்த 1993ஆம் ஆண்டு டென்மார்க் அணிக்கு எதிராக 239 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே இங்கிலாந்தின் முந்தைய சாதனை வெற்றியாகும். அந்த நிலையில் அத்தொடரின் சம்பிரதாய கடைசிப் போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற்றது. மழையால் தலா 22 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை அபாரமாக பந்து வீசிய அயர்லாந்து வெறும் 153 ரன்களுக்கு சுருட்டி வீசியது.
அயர்லாந்து பதிலடி:
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக டம்மி பியூமோண்ட் 52 ரன்கள் எடுத்த நிலையில் அயர்லாந்துக்கு அதிகபட்சமாக அமீ மகுரி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 154 ரன்களை துரத்திய அயர்லாந்துக்கு கேப்டன் கெபி லெவிஸ் அதிரடியாக 72 (56) ரன்கள் குவித்தார். அவருடன் லேக் பால் 22, அமி ஹண்டர் 18, அலனா டால்ஜெல் 4* (1) ரன்கள் எடுத்ததால் 155-7 ரன்களை எடுத்த அயர்லாந்து கடைசி பந்தில் போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதையும் படிங்க: இப்போ ஆஸியை பாத்து இந்தியா பயப்படுறதில்லை.. அதுக்கு 2008 துவக்கமும் கோலியும் தான் காரணம்.. ரிக்கி பாண்டிங்
அதனால் 2001க்குப்பின் 23 வருடங்கள் கழித்து இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி பெற்று அயர்லாந்து சாதனை படைத்தது. அந்த வகையில் கடந்த போட்டியில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்த அயர்லாந்து ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்த்து ஆறுதல் வெற்றி பெற்றது. மறுபுறம் 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்ற இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக மேடி வில்லியர்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.



