ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ளது. இந்த தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 60 ரன்கள் இந்தியா வெற்றி பெற்றது. அந்த போட்டியிலிருந்து சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அதே போல சுமாரான ஃபார்மில் இருந்த ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே ஆகியோர் பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தது இந்திய அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது. ஆனாலும் இந்திய அணியில் ஆல் ரவுண்டர்களுக்கு பஞ்சம் நிலவுவதாக இர்பான் பதான் கவலை தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் உள்ள மேக்ஸ்வெல், க்ரீன், மார்ஷ் ஆகியோருக்கு நிகரான வீரர்கள் இந்திய அணியில் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பலவீனம்:
போதாகுறைக்கு சூரியகுமார், விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பந்து வீச மாட்டார்கள் என்பது இந்திய அணியை ஊனமாக மாற்றியுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணியை வைத்து உங்களால் 2 கலவையை மட்டுமே உருவாக்க முடியும். ஒன்று அக்சர் படேல் உட்பட 5 பவுலர்களை தேர்ந்தெடுத்து பேட்டிங் வரிசையை ஆழப்படுத்த முடியும்”
“மற்றொரு கலவையில் துபே, பாண்டியா முழுமையாக பந்து வீசுவார்கள் என்ற நம்பிக்கையுடன் 4 முதன்மை பவுலர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். மற்றொரு வாய்ப்பாக ஜெயிஸ்வால் உள்ளார். ஆனால் வலைப்பயிற்சியில் பந்து வீசிய அவர் முதன்மைப் போட்டிகளில் பந்து வீசியதில்லை. சிவம் துபே உலகக்கோப்பைக்காக ஐபிஎல் தொடரின் வலைப்பயிற்சியில் தொடர்ந்து சில ஓவர்கள் பந்து வீசி வருவதாக தெரிவித்திருந்தார்.
“ஒருவேளை ஹர்திக் பாண்டியா 3 – 4 ஓவர்களை வீசினால் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இருப்பினும் ரோகித், விராட் அல்லது சூரியகுமார் போன்ற நம்முடைய பேட்ஸ்மேன்கள் பந்து வீசமாட்டார்கள் என்பது நம்மை ஊனமாக்குகிறது. பொதுவாக இந்த வீரர்களில் யாரேனும் பந்து வீசினால் அது நம்முடைய அணிக்கு பெரிய பயனை கொடுக்கும். இங்கிலாந்து அணியில் மொய்ன் அலி, லிவிங்ஸ்டன், வில் ஜேக்ஸ் என டாப் 7 வீரர்களில் ஆல் ரவுண்டர்களை இருப்பதைப் பற்றி நாம் பேசுகிறோம்”
இதையும் படிங்க: இந்தியா எப்படி போன எனக்கென்ன.. நான் 2024 டி20 உ.கோ பாக்கமாட்டேன்.. இதான் காரணம்.. ரியான் பராக்
“எனவே ஆல் ரவுண்டர்களுக்கு பஞ்சம் இருப்பது இந்திய அணியின் பலவீனமாகும். ஆஸ்திரேலிய அணியை பாருங்கள். மார்ஷ், க்ரீன், மேக்ஸ்வெல் போன்றவர்கள் முழுமையாக 4 ஓவர்கள் வீசுவார்கள். அதனாலேயே தற்போது இந்தியா சிவம் துபேவை கொண்டு வந்துள்ளது. எனவே இந்த சிறிய பலவீனத்தை சரி செய்ய உலகக் கோப்பையில் பேட்ஸ்மேன்கள் யாரேனும் 2 – 3 ஓவர்கள் வீச வேண்டும்” என்று கூறினார்.



