வாழ்வா – சாவா போட்டியில் சொதப்பிய டெல்லி ! அதிர்ந்த முழக்கம், மும்பையின் வெற்றியை கொண்டாடும் ஆர்சிபி ரசிகர்கள்

Tim David MI RCB Fans
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் மே 21-ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான 68-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஏற்கனவே தொடர் தோல்விகளால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை கண்டிப்பாக வென்றால் மட்டுமே தாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் பெங்களூரு அணி கேப்டன் டுப்லஸ்ஸிஸ், விராட் கோலி உட்பட அதன் மொத்த வீரர்களும் ரசிகர்களும் மும்பைக்கு ஆதரவு கொடுத்த நிலையில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

மறுபுறம் இப்போட்டியில் வென்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலைமையில் களமிறங்கிய டெல்லிக்கு டேவிட் வார்னர் 5 (6) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த ஒருசில ஓவர்களிலேயே நிதானமாக பேட்டிங் செய்த பிரிதிவி ஷா’வை 24 (23) ரன்களில் ஜஸ்பிரித் பும்ரா கிளீன் போல்ட்டாக்கினார். போதாக்குறைக்கு அடுத்து வந்த சர்ப்ராஸ் கானும் 10 (7) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்ததால் 50/4 என ஆரம்பத்திலேயே திணறிய டெல்லி மோசமான தொடக்கத்தை பெற்றது.

- Advertisement -

இலக்கு 160:
அந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ரோவ்மன் போவல் ஆகியோர் நிதானமாகவும் தேவையான அதிரடியையும் வெளிப்படுத்தி 5-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பொறுப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். 16 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்த இந்த ஜோடியில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 39 (33) ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட் முக்கிய நேரத்தில் ஆட்டமிழக்க 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் முடிந்த அளவு போராடிய ரோவ்மன் போவல் 43 (34) ரன்களுக்கு அவுட்டானர். கடைசி நேரத்தில் 2 சிக்சர்களை பறக்கவிட்ட அக்சர் பட்டேல் 19* (10) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் டெல்லி 159/7 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 160 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 (13) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க வீரர் இஷான் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 48 (35) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் அவருடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தது தேவால்டு ப்ரேவிஸ் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 37 (33) ரன்கள் எடுத்து 15-வது ஓவரில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

கொண்டாடும் ரசிகர்கள்:
குறிப்பாக 95/3 என தடுமாறிய அந்த அணிக்கு கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 59 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கிய டிம் டேவிட் 2 பவுண்டரி 4 சிக்சர்கள் பறக்கவிட்டு 34 (11) ரன்களை விளாசி வெற்றியை உறுதி ஆட்டமிழந்தார். அப்போது வான்கடே மைதானத்தில் மும்பை வெற்றி பெற வேண்டுமென பெங்களூருவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரசிகர்கள் “ஆர்சிபி ஆர்சிபி” என விண்ணதிர முழங்கிய நிலையில் அதிரடி காட்டிய மற்றொரு இளம் வீரர் திலக் வர்மா 1 பவுண்டரி 1 சிக்சருடன் 21 (17) ரன்கள் எடுத்து வெற்றியை மேலும் உறுதி செய்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரியை பறக்க விட்ட ரமந்தீப் சிங் 13* (6) ரன்கள் எடுத்ததால் 19.1 ஓவரில் 160/5 ரன்கள் எடுத்த மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனால் கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி அடைந்தாலும் பங்கேற்ற 14 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்தாலும் 10 தோல்விகளை பதிவு செய்த மும்பை வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்து அவமானத்தை சந்தித்தது. இருப்பினும் மும்பையின் வெற்றியை பெங்களூரு வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடுகின்றனர்.

ஏனெனில் இப்போட்டியில் டெல்லி தோல்வியடைந்ததால் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்திலிருந்த அந்த அணி 4-வது இடத்திற்கு முன்னேறி குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகளை தொடர்ந்து 4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.

சொதப்பிய டெல்லி:
மறுபுறம் இந்த வாழ்வா – சாவா போட்டியில் பேட்டிங்கில் 20 – 30 ரன்களை எக்ஸ்ட்ராவாக எடுக்க தவறிய டெல்லி பந்துவீச்சில் முடிந்த அளவுக்கு போராடிய போதிலும் முக்கிய விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே எடுக்க தவறியதால் பங்கேற்ற 14 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு 5-வது இடத்திற்கு பின்தங்கியது. அத்துடன் ஐபிஎல் 2022 தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறிய அந்த அணியின் முதல் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு மீண்டும் கனவாகவே போனது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.

Advertisement