பலத்தை நிரூபித்த குஜராத். குவாலிபயர் 1 போட்டியில் ராஜஸ்தான் அணியை சாய்த்து அசத்தல் – நடந்தது என்ன?

Hardik Pandya GT Vs RR 2.jpeg
Advertisement

ஐபிஎல் 2022 தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று கொல்கத்தா நகரில் கோலாகலமாக துவங்கியது. அதில் மே 24-ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கிய அந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு இளம் தொடக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் 3 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

Sanju Samson v GT

அதனால் 11/1 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து 5 பவுண்டரி 3 சிக்சருடன் 47 (26) ரன்கள் குவித்து 2-வது விக்கெட்டுக்கு மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லருடன் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தார். அந்த நிலையில் களமிறங்கி 2 பவுண்டரி 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட தேவ்தூத் படிக்கள் தனது பங்கிற்கு 28 (20) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

- Advertisement -

கலக்கிய பட்லர்:
மறுபுறம் ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்திருந்தாலும் சமீபத்திய போட்டிகளில் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நட்சத்திரம் ஜோஸ் பட்லர் இந்த முக்கியமான போட்டியில் அரைசதம் கடந்து அசத்தலாக பேட்டிங் செய்தார். ஆனாலும் அவருக்கு கை கொடுக்க வேண்டிய சிம்ரோன் ஹெட்மையர் 4 (7) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆரம்பத்தில் மெதுவாக பேட்டிங் செய்து கொண்டிருந்த பட்லர் கடைசி நேரத்தில் சரவெடியாக பேட்டிங் செய்து 12 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 89 (56) ரன்கள் எடுத்து ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட்டானார். அதனால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 188/6 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் ஷமி, தயால், சாய் கிசோர், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

Jos Buttler 89

அதை தொடர்ந்து 189 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே ரித்திமான் சஹா டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதனால் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த அந்த அணியை அடுத்து களமிறங்கிய மேத்யூ வேட் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் உடன் இணைந்து மீட்டெடுக்க முயற்சித்தார். 2-வது விக்கெட்டுக்கு அதிரடியான 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 35 (21) ரன்களில் கில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் மேத்யூ வேட் 35 (30) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

குஜராத் மாஸ்:
அந்த இக்கட்டான தருணத்தில் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா பொறுப்பாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்க்க அவருக்கு டேவிட் மில்லர் கைகொடுத்தார். அதனால் வெற்றியை நிதானமாக நெருங்கிய குஜராத்துக்கு கடைசி 5 ஓவரில் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்ட போது மில்லர் அரைசதம் கடந்து வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். குறிப்பாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்துகளிலும் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்ட டேவிட் மில்லர் மொத்தம் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 68* (38) ரன்கள் எடுத்து மிரட்டல் பினிஷிங் கொடுத்தார். அவருடன் ஹர்திக் பாண்டியாவும் 5 பவுண்டரியுடன் 40* (27) ரன்கள் எடுத்ததால் 19.3 ஓவரில் 191/3 ரன்கள் எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Hardik Pandya GT Vs RR

இந்த அற்புதமான வெற்றியால் மே 29இல் நடைபெறும் ஐபிஎல் 2022 தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முதல் சீசனிலேயே பாண்டியா தலைமையிலான குஜராத் நேரடியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. இந்த வருடம் அந்த அணியின் பந்துவீச்சு மற்றும் சேசிங் ஆகியவைதான் அந்த அணியின் பலமாக இருந்தது. அந்த நிலைமையில் பந்துவீச்சில் ரஷீத் கான் தவிர இதர பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினாலும் பேட்டிங்கில் டாப் ஆர்டர் சொதப்பிய போதிலும் நங்கூரமாக ஹர்திக் பாண்டியா நிற்க மறுபுறம் டேவிட் மில்லர் இந்த முக்கிய போட்டியில் மிரட்டலாக பேட்டிங் செய்து சூப்பர் பினிஷிங் கொடுத்து பைனலுக்கு அழைத்துச் சென்றார்.

மீண்டும் ராஜஸ்தான்:
மறுபுறம் பேட்டிங்கில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் கடைசியில் பட்லர் அதிரடியில் நல்ல ரன்களை எடுத்த ராஜஸ்தானுக்கு பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேத் மெக்காய் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களும் 9.50க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினார்.

RR

அதைவிட அந்த அணியின் இரட்டை குழல் துப்பாக்கிகளான அஸ்வின் – சஹால் சுழல் பந்துவீச்சு ஜோடி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் தவறியது தோல்வியை பரிசளித்தது. இப்போட்டியில் தோல்வியடைந்தாலும் நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் வென்று வரும் அணியுடன் வரும் மே 27இல் நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் மீண்டும் வெற்றிக்காக போராட உள்ளது.

Advertisement