ஐபிஎல் 2022 : மும்பை – டெல்லி ! வெல்லப்போவது யார்? முன்னோட்டம், வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் ரிப்போர்ட் இதோ

MIvsDC
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இம்முறை லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கேற்கும் 74 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய ஐபிஎல் தொடர் வரும் மே 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

IPL

- Advertisement -

மொத்தம் 65 நாட்கள் நடைபெறும் இந்த தொடர் முழுவதும் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் முக்கிய மைதானங்களில் மட்டும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை பார்ப்பதற்கு 25% ரசிகர்கள் மட்டும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி உள்ளன.

டெல்லி – மும்பை மோதல்:
இந்த தொடரின் 2-வது நாளில் நடைபெறும் 2 போட்டிகளில் முதல் போட்டியாகடெல்லி மற்றும் முன்னாள் சாம்பியன் மும்பை ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி பற்றிய முழு விவரங்களையும் இப்போது பார்ப்போம்.

mivsdc

போட்டி விவரம்: போட்டி 2, டெல்லி கேபிட்டல்ஸ் V மும்பை இந்தியன்ஸ், மார்ச் 27, மதியம் 3.30 மணி, ப்ராபோர்ன் மைதானம், மும்பை.

- Advertisement -

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்.

முன்னோட்டம்:
மும்பை இந்தியன்ஸ்: ஐபிஎல் வரலாற்றில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. அந்த அணியில் ஹர்திக் பாண்டியா க்ருனால் பாண்டியா என கடந்த வருடங்களில் விளையாடிய ஆல்-ரவுண்டர்கள் இந்த முறை இல்லாதது பின்னடைவாகும்.

- Advertisement -

அதேபோல் குயின்டன் டி காக், டிரென்ட் போல்ட் போன்ற முக்கியமான வெளிநாட்டு வீரர்களும் இம்முறை அந்த அணியில் இல்லை என்றாலும் அதற்கு ஈடான வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தின் போது வாங்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அந்த அணியில் 3-வது இடத்தில் விளையாடும் முக்கிய வீரர் சூர்யகுமார் யாதவ் காயத்தால் இந்த முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார். இருப்பினும் அனுபவம் வாய்ந்த கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் சிறந்த வீரர்களை களமிறக்கி டெல்லிக்கு எதிரான போட்டியில் வெற்றியை பெற்று ஐபிஎல் தொடரை ஆரம்பத்திலேயே வெற்றியுடன் துவக்க மும்பை அணி போராடும் என எதிர்பார்க்கலாம்.

mishra

டெல்லி கேபிட்டல்ஸ்:
மறுபுறம் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத டெல்லி கேப்பிடல்ஸ் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற போதிலும் கோப்பையை வாங்க முடியவில்லை. எனவே ரிஷப் பண்ட் தலைமையில் இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் அந்த அணி களமிறங்கி உள்ளது. குறிப்பாக மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் அந்த அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் அன்றிச் நோர்ட்ஜெ விளையாடுவது சந்தேகம் என்ற நிலையில் அவரின் இடத்தில் வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மான் விளையாட உள்ளார்.

- Advertisement -

மேலும் ஆஸ்திரேலியாவின் நட்சத்திரங்கள் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு பின்பு தான் அந்த அணியுடன் இணைய உள்ளனர். எனவே இருக்கும் வீரர்களில் தரமானவர்களை அந்த அணியின் பயிற்சியாளர் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்து கொடுப்பார் என்பதால் மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிபெற ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் போராட உள்ளது.

dc

வரலாற்று புள்ளிவிவரம்:
1. ஐபிஎல் வரலாற்றில் மும்பை மற்றும் டெல்லி ஆகிய 2 அணிகளும் இதுவரை மொத்தம் 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் 16 போட்டிகளில் வென்ற மும்பை இந்தியன்ஸ் சற்று பலத்துடன் காணப்படுகிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் டெல்லி அணியும் 14 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

2. இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 3 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் 2 போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

3. கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த 2 அணிகள் மோதிய 2 போட்டிகளிலும் மும்பையை தோற்கடித்த டெல்லி தன்னை வளர்ந்து வரும் அணி என நிரூபித்தது. மேலும் இப்போட்டி நடைபெறும் ப்ராபோர்ன் மைதானத்தில் இவ்விரு அணிகள் மோதுவது இதுவே முதல்முறையாகும்.

பிட்ச் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் மும்பை சுற்றிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்பதால் இந்த போட்டி முழுமையாக நடைபெறும் என நம்பலாம். இந்த போட்டி நடைபெறும் ப்ராபோர்ன் மைதானம் வரலாற்றில் பேட்டிங்க்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. மேலும் அதற்கு ஈடாக ஆரம்ப கட்ட ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்விங் கிடைக்கலாம்.

mumbai indians

அதேபோல் இங்கு சுழல் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் எடுக்க வேண்டுமெனில் சரியான லைனில் பந்து வீச வேண்டும் இல்லையெனில் அதற்கான தண்டனை கிடைத்து விடும். இது மதிய நேர போட்டியாக நடைபெற உள்ளதால் பனியின் தாக்கம் எதுவும் இருக்காது. எனவே இப்போட்டியில் இரு அணிகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன்களும் ரன் மழை பொழிந்து பெரிய ஸ்கோர் அடிப்பார்கள் என நம்பலாம். அதற்கேற்றார் போல் இந்த மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 180 ஆகும். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானித்து பின்னர் சேசிங் செய்வது பாதுகாப்பான வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement