இந்தியாவின் அடுத்த கேப்டன் யார் என்பது இதில் தெரிந்துவிடும் – ரவி சாஸ்திரியின் கணிப்பு

Shastri
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று துவங்கி மே 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்க உள்ள நிலையில் இந்த தொடர் முழுவதும் மும்பை, புனே மற்றும் குஜராத் ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ipl

- Advertisement -

வர்ணனையாளராக ரவி சாஸ்திரி:
இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக நடப்புச் சாம்பியன் சென்னை உள்ளிட்ட அனைத்து அணிகளும் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் இந்த தொடரில் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி இந்தியாவிற்காக விளையாடும் வாய்ப்பை பிடிப்பதற்காக இளம் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த வேளையில் இந்த தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது ஐபிஎல் போட்டிகளுக்கு நேரடி வர்ணணை செய்யும் வர்ணனையாளர்களின் பட்டியலை அதை ஒளிபரப்பும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மிகச் சிறப்பாக வர்ணனை செய்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த முன்னாள் இந்திய ஜாம்பவான் ரவி சாஸ்திரியின் பெயர் இடம்பிடித்துள்ளது.

Ravi Shastri Suresh Raina

கடந்த பல வருடங்களாக தொலைக்காட்சியில் வர்ணனை செய்து வந்த அவர் 2017 – 2021 வரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டதால் அந்த பணியை செய்ய முடியாமல் இருந்தது. தற்போது அதில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் மீண்டும் வர்ணனையாளர் அவதாரம் எடுத்துள்ளார். அவருடன் ஐபிஎல் தொடரில் யாரும் வாங்காத மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அடுத்த கேப்டன் யார்:
இந்நிலையில் விரைவில் துவங்கும் ஐபிஎல் தொடரில் இந்தியாவின் வருங்கால கேப்டன் யார் என்பது தெரியவரும் என ரவி சாஸ்திரி கணித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி கேப்டனாக செயல்பட மாட்டார் என்ற நிலையில் ரோகித் சர்மா குறிப்பாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவர் மற்ற அனைவரை காட்டிலும் அதிக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார் என்பது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.

shastri

இந்த நேரத்தில் இந்தியாவிற்காக வருங்காலத்தில் கேப்டனாக செயல்படக்கூடிய தகுதியானவர்களில் ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் அல்லது ஹர்டிக் பாண்டியா என யாராக இருந்தாலும் சரி அவர்களை இந்த ஐபிஎல் தொடரில் இந்தியா உன்னிப்பாக கவனிக்க உள்ளது. குறிப்பாக கடந்த சில வருடங்களாக அபாரமாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் சிறப்பான நுணுக்கங்களை கற்றுள்ளார்” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல கடந்த பல வருடங்களாக கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி விலகியுள்ள நிலையில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் 34 வயதை கடந்துவிட்ட அவர் இன்னும் ஒரு சில வருடங்கள் மட்டுமே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தியாவிற்காக வரும் காலங்களில் நீண்ட நாட்கள் கேப்டன்ஷிப் செய்யும் இளம் வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பு இந்திய அணி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

IND

அந்த வேளையில் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்கள் ரோகித் சர்மா தலைமையில் இந்தியாவின் வருங்கால கேப்டனாக வளர்க்கப் படுவார்கள் என இந்திய தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக இந்திய அணியில் சாதாரணமாக தேர்வு செய்யப்படும் வீரர்கள் கூட அவர்களின் ஐபிஎல் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே இந்த ஐபிஎல் 2022 தொடரில் மேற்குறிப்பிட்ட வருங்கால கேப்டன்கள் பட்டியலில் இருக்கும் வீரர்கள் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவரே இந்தியாவின் அடுத்த கேப்டனாக வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எளிதான வேலை:
“இந்த இளம் வீரர்கள் தங்களது அணிகளை எவ்வாறு வழி நடத்துகிறார்கள் என்பதை பார்க்க இந்திய தேர்வு குழுவினருக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில் இப்போது ஒரு திடமான தரமான கேப்டன் இந்தியாவிற்கு தேவைப்படுகிறது” என இது பற்றி ரவிசாஸ்திரி மேலும் தெரிவித்தார். அவர் கூறுவது போல கேஎல் ராகுல் லக்னோ அணிக்கும், ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கும், ஸ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கும் இந்த சீசனில் கேப்டன்களாக செயல்பட உள்ளனர்.

இதையும் படிங்க : தோனிக்கு பின் அடுத்த வாரிசு கேப்டன் இவர்கள்தான் – கழற்றிவிட்ட பிறகு முதல் முறையாக ரெய்னா கருத்து

இதில் யார் மிகச்சிறப்பாக தனது அணியை வழிநடத்தி கோப்பையை நெருங்குகிறாரோ அல்லது கோப்பையை வெல்கிறாராறோ அவரே கண்டிப்பாக அடுத்த ஒரு சில வருடங்களில் இந்தியாவின் முழு நேர கேப்டனாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என ரவிசாஸ்திரி கணித்துள்ளார். மேலும் ஐபிஎல் போன்ற ஒரு தொடர் இருப்பதால் இந்தியாவின் அடுத்த கேப்டனை தேர்வு செய்வது இந்திய தேர்வு குழுவினருக்கு எளிதான வேலை என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கு தேவையான தரமான வேகப்பந்து வீச்சாளர்களையும் இந்த ஐபிஎல் வாயிலாக எளிதாக கண்டு கொள்ளலாம் என ரவிசாஸ்திரி மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement