ஐபிஎல் 2022 : 13 வருட கனவில் சொதப்பிய ராஜஸ்தான் ! முதல் சீசனிலேயே கில்லியாக சொல்லி அடித்து மாஸ் காட்டிய பாண்டியாவின் குஜராத் சாம்பியன்

GT vs RR Shubman Gill
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26இல் மும்பையில் கோலாகலமாக துவங்கியது. இந்த வருடம் 10 அணிகள் பங்கேற்ற 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த போட்டிகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வந்தது. அதில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அசத்தி முக்கியமான நாக் அவுட் போட்டியில் ஏற்பட்ட அழுத்தத்திற்கு அஞ்சாமல் கலக்கிய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதிய மாபெரும் இறுதிப்போட்டி அகமதாபாத் நகரில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 8 மணிக்கு துவங்கியது.

ஏஆர் ரகுமான், ரன்பீர் கபூர் போன்ற நட்சத்திரங்கள் பங்கேற்ற நிறைவு விழாவுடன் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் துவங்கிய அந்த பைனலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 1 பவுண்டரி 2 சிக்சர்களை பறக்கவிட்ட இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 22 (16) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சொதப்பிய ராஜஸ்தான்:
அந்த நிலைமையில் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி பறக்கவிட்டாலும் 14 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அடுத்து வந்த தேவதூத் படிக்கல் மெதுவாக பேட்டிங் செய்து பின்னடைவை ஏற்படுத்தி 2 (10) ரன்களில் நடையை கட்டினார். அதனால் 79/3 என தடுமாறிய அந்த அணியை 4 சதங்கள் அடித்து ரன் மழை பொழிந்து ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்து முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 5 பவுண்டரியுடன் 39 (35) ரன்களில் ஆட்டமிழந்து மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தார்.

அதனால் பெரிய பின்னடைவை சந்தித்த ராஜஸ்தானுக்கு ஃபினிஷராக கருதப்படும் சிம்ரோன் ஹெட்மையரும் 11 (12) ரன்களில் ஆட்டமிழக்க அஷ்வின் 6 (9) ரியன் பராக் 15 (15) என அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் குஜராத்தின் நல்ல பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் பெவிலியன் திரும்பியதால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் வெறும் 130/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அளவுக்கு இந்த மாபெரும் பைனலில் குஜராத் சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் மிரட்டிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், தமிழகத்தின் சாய் கிஷோர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

- Advertisement -

குஜராத் சாம்பியன்:
அதை தொடர்ந்து 131 என்ற சுலபமான இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர் ரித்திமான் சஹா 5 (7) ரன்களில் அவுட்டாக அடுத்த ஒருசில ஓவர்களில் மேத்யூ வேட் 8 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அதனால் 23/2 என தடுமாறிய அந்த அணியை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா மேலும் சரிய விடாமல் நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்தார். மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் உடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு முக்கியமான 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 34 (30) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

அவருக்கு உறுதுணையாக நின்ற சுப்மன் கில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 45* (43) ரன்கள் எடுக்க அவருடன் கடைசி நேரத்தில் களமிறங்கி பட்டய கிளப்பிய டேவிட் மில்லர் வழக்கம்போல 3 பவுண்டரி 1 சிக்சருடன் 32* (19) ரன்களை அதிரடியாக எடுத்து பினிஷிங் கொடுத்தார். அதனால் 18.1 ஓவர்களிலேயே 133/3 ரன்களை எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் ஐபிஎல் 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற அந்த அணி தனது முதல் வருடத்திலேயே கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்துள்ளது. இத்தனைக்கும் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் லீக் சுற்றில் அசத்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று நாக் அவுட் சுற்றிலும் குவாலிபயர் 1 போட்டியில் ராஜஸ்தானை தோற்கடித்து நேரடியாக பைனலுக்கு வந்தது.

கோட்டைவிட்ட ராஜஸ்தான்:
இறுதிப் போட்டியிலும் கடைசி முயற்சியாக அதுவும் தங்களது சொந்த மண்ணில் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் அட்டகாசமாக பந்துவீசி அந்த அணி பேட்டிங்கிலும் தடுமாறாமல் எளிதான வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. மறுபுறம் இவ்வளவு பெரிய பிரம்மாண்ட அழுத்தம் நிறைந்த போட்டியில் டாஸ் வென்ற போதிலும் அதற்கேற்றார்போல் பேட்டிங் செய்யாமல் சொதப்பிய ராஜஸ்தான் பந்துவீச்சில் போராடும் அளவுக்கு ரன்களை எடுக்கவில்லை. அதனால் 2008க்கு பின் 13 வருடங்கள் கழித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி பெற்ற பொன்னான வாய்ப்பை வீணாக்கிய அந்த அணி ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு பின் 2-வது கோப்பையை வென்று அவருக்கு அஞ்சலியாக பரிசளிக்க தவறியது.

Advertisement