முக்கியமான போட்டியில் பலத்தை நிரூபித்த பெங்களூரு – பைனலுக்கு போய்டுவாங்களோ

Mohammed Siraj De Kock
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் சுற்றுப்போட்டிகள் துவங்கியுள்ள நிலையில் மே 25-ஆம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்தால் அத்தோடு வீட்டுக்கு கிளம்பலாம் என்ற சூழ்நிலையில் புள்ளி பட்டியலில் 3, 4 ஆகிய இடங்களைப் பிடித்த லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மழையின் காரணமாக தாமதமாக 8.10 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் டுப்லஸ்ஸிஸ் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

Avesh Khan

- Advertisement -

அந்த சமயத்தில் களமிறங்கிய இளம் வீரர் ரஜத் படிடார் உடன் கைகோர்த்த மற்றொரு நட்சத்திர தொடக்க வீரர் விராட் கோலி 2-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு மீட்டெடுத்தாலும் 25 (24) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அப்போது களமிறங்கிய அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 9 (10) ரன்களிலும் மஹிபால் லோம்ரோர் 14 (9) ரன்களிலும் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 115/4 என தடுமாறிய அந்த அணிக்கு மறுபுறம் நங்கூரமாக நின்று லக்னோ பவுலர்களை சொல்லி அடித்த ரஜத் படிடார் அரைசதம் கடந்து கடைசி நேரத்தில் அதிரடியான பேட்டிங் செய்தார்.

மிரட்டிய படிடார்:
கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்து மிரட்டிய அவர் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடி சரவெடியாக அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 12 பவுண்டரி 7 சிக்ஸர்களை விளாசி சதமடித்து 112* (54) ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் எலிமினேட்டர் போட்டியில் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாறு படைத்த அவர் பிளே ஆப் போட்டிகளில் சதமடித்த முதல் பெங்களூர் பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்தார். அவருடன் பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் தனது பங்கிற்கு 5 பவுண்டரி 1 சிக்சருடன் 37* (23) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் பெங்களூர் 207/4 ரன்கள் எடுத்தது.

Rajat Patidar 112

அதை தொடர்ந்து 208 என்ற கடினமான இலக்கை துரத்திய லக்னோவுக்கு முதல் ஓவரிலேயே குயின்டன் டி காக் 6 (5) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அந்த சமயத்தில் களமிறங்கிய மன்னன் வோஹ்ரா 1 பவுண்டரி 2 சிக்சருடன் 19 (11) ரன்களை அதிரடியாக எடுத்து ஆட்டமிழந்தார். அதனால் 41/2 என சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை மறுபுறம் நின்ற மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீட்டெடுக்க முயற்சித்த நிலையில் அவருக்கு உறுதுணையாக தீபக் ஹூடா கை கொடுத்தார்.

- Advertisement -

பெங்களூரு வெற்றி:
5-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் பெங்களூர் பவுலர்களை நிதானமாகவும் அதிரடியாகவும் எதிர்கொண்டு 15-ஆவது ஓவர் வரை சிறப்பாக பேட்டிங் செய்து 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல நிலைமையை எட்ட வைத்தபோது 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் தீபக் ஹூடா 45 (26) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாகவும் சிறப்பாகவும் பேட்டிங் செய்த கேஎல் ராகுல் அரைசதம் கடந்ததால் கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்ட போது எதிர்ப்புறம் வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 9 (9) ரன்களில் அவுட்டானாதல் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Deepak Hooda

அப்போது 2 ஓவரில் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டபோது ஹேசல்வுட் வீசிய அந்த ஓவரில் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 79 (58) ரன்கள் எடுத்து கேஎல் ராகுலும் அடுத்த பந்திலேயே க்ருனால் பாண்டியா கோல்டன் டக் அவுட்டானதால் போட்டியில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. அதனால் வெற்றிக்கு கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்ட போது ஹர்ஷல் படேல் வீசிய அந்த ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ 20 ஓவர்களில் 193/6 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

பைனல் போகுமா:
இந்த முக்கியமான போட்டியில் டுப்லஸ்ஸிஸ், விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல் போன்ற முக்கிய வீரர்கள் பேட்டிங்கில் கோட்டை விட்டாலும் பயமறியாத காளையாக சீறி பாய்ந்த இளம் ரஜத் படிடார் சிறப்பான சதமடித்து பெங்களூருவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதேபோல் தினேஷ் கார்த்திக் பினிஷிங் மீண்டும் துருப்புச் சீட்டாக செயல்பட்ட நிலையில் பந்துவீச்சில் லக்னோவின் குயின்டன் டி காக்கை ஆரம்பத்திலேயே காலி செய்த அந்த அணி ஹூடா, ராகுல் ஆகியோர் கடைசி வரை நின்று போட்டியை முடிக்க விடாமல் அவுட் செய்து வெற்றியை உறுதி செய்தது.

Rajat Patidar 112

குறிப்பாக கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசி ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா ஆகியோரை அடுத்தடுத்து அவுட் செய்ததே போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதிலும் 4 ஓவரில் ஹர்ஷல் படேல் வெறும் 25 ரன்கள் கொடுக்க ஹேசெல்வுட் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இந்த வெற்றியால் மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் காத்திருக்கும் ராஜஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்த உள்ள பெங்களூரு அதில் வென்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையை எட்டியுள்ளது. மறுபுறம் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கிய லக்னோ பேட்டிங்கில் கடைசி நேரத்தில் சிறப்பாகச் செயல்பட தவறியதால் ஐபிஎல் 2022 தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.

Advertisement