IND vs ENG : இந்தியாவை அடிச்சுருக்கலாம், ஆனா எங்ககிட்ட முடியாது – இங்கிலாந்தை எச்சரிக்கும் ஆஸி நட்சத்திரம்

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் நடைபெற்று வந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் கில்லி என நிரூபித்தது. கடந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகளின் முடிவில் ஜோ ரூட் தலைமையில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவிடம் சரணடைந்த இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.

அப்போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காமில் நடைபெற்றது. அதில் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் முதல் 3 நாட்களில் அட்டகாசமாக செயல்பட்டு வலுவான நிலையில் இருந்த இந்தியாவை கடைசி 2 நாட்களில் புரட்டி எடுத்த இங்கிலாந்து 378 ரன்களை அசால்டாக சேசிங் செய்து வரலாற்று தோல்வியை பரிசளித்தது. அதனால் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற கனவை இந்தியா நிஜமாக தவறியது.

- Advertisement -

மாஸ் இங்கிலாந்து:
முன்னதாக கடந்த 2017இல் கேப்டனாக பொறுப்பேற்ற ஜோ ரூட் தலைமையில் சொந்த மண்ணில் கூட வெற்றிகளை பெற திணறிய இங்கிலாந்து கடந்த ஜனவரியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் 4 – 0 என்ற மோசமான தோல்வியை ஆஸ்திரேலியாவிடம் சந்தித்தது. அதனால் கடுப்பான இங்கிலாந்து வாரியம் முதலில் ஜோ ரூட்டை கேப்டன் பதவியிலிருந்து விலகவைத்து அவரிடம் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை கேப்டனாக நியமித்தது. அதோடு நிற்காமல் அவருக்கு ஏற்றார்போல் அதிரடியை மட்டும் விரும்பக்கூடிய பிரண்டன் மெக்கல்லமை பயிற்சியாளராக நியமித்தது.

அவர்களது தலைமையில் முதல் முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி நிர்ணயித்த 250க்கும் மேற்பட்ட ரன்கள் இலக்கை அதிரடியாகவும் அசால்டாகவும் சேசிங் செய்த இங்கிலாந்து 3 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றி பெற்று முரட்டுத்தனமான வலுவான அணியாக மாறியது. அதேபோல விளையாடி இந்தியாவையும் மண்ணைக் கவ்வ வைப்போம் என்று அப்போதே விடுத்த எச்சரிக்கையை சொன்னது போல் இறுதியில் பென் ஸ்டோக்ஸ் செய்து காட்டினார்.

- Advertisement -

வரலாற்றை மாற்றப்போகிறோம்:
அதுவும் இந்தியாவுக்கு எதிராக வரலாற்றிலேயே தங்களது அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் 250க்கும் மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாக துரத்திய முதல் அணி என்ற உலக சாதனையை படைத்தது. மொத்தத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரை அம்பியாக காட்சியளித்த இங்கிலாந்து ஸ்டோக்ஸ் – மெக்கல்லம் வருகையால் தற்போது அந்நியனாக மாறியுள்ளது. மேலும் இது வெறும் ஆரம்பமே என்று தெரிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்ற இலக்கணத்தையும் வரலாற்றையும் மாற்றி எழுதப்போவதாக மொத்த உலகிற்கும் இந்தியாவை தோற்கடித்த பின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும் சொந்த மண்ணில் ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத இந்தியாவை தோற்கடித்து 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் மட்டுமே செய்த இங்கிலாந்து என்னமோ சவாலான வெளிநாட்டு மண்ணில் தொடரை வென்றது போல் பேசுவதாக நிறைய ரசிகர்கள் அதிருப்தியை தெரிவிக்கின்றனர். இதே அதிரடியை உலகின் அனைத்து நாடுகளிலும் வெளிநாட்டு மண்ணில் தொடர்ச்சியாக செய்து காட்ட முடியுமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தின் இந்த அதிரடி ஆட்டம் தொடர்ச்சியாக நிலையானதாக இருக்க முடியுமா என்று ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

எங்களிடம் முடியாது:
தற்போது இலங்கை மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர் இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தது பின்வருமாறு. “அப்போட்டியை நான் கொஞ்சமாக பார்த்தேன். நிச்சயமாக பொழுதுபோக்காக இருக்கும் வகையில் அவர்கள் அதிரடியான ஷாட்டுகளை விளையாடினார்கள். சொல்லப்போனால் அலெஸ் லீஸ் போன்ற சுமாரானவர் கூட இந்தியாவுக்கு எதிராக அதிரடியாக பேட்டிங் செய்தார். அவர்களின் அதிரடி ஆட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும், அது நிலையானதாக இருக்குமா என்பதை பார்க்க ஆவலாக உள்ளது”

“ஒருவேளை லேசான புற்கள் நிறைந்த பிட்ச்சில் ஜோஸ் ஹேசல்வுட், பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க் போன்றவர்கள் உங்களைத் தாக்கும் போது அதே மாதிரியான ஆட்டத்தை உங்களால் வெளிப்படுத்த முடியுமா? அவ்வாறு நடக்குமா என்பதை பார்க்கத்தான் போகிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs ENG : ரவி சாஸ்திரியை தொடர்ந்து விராட் கோலியை பிரேக் எடுக்க அறிவுறுத்தும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன்

அதாவது சொந்த மண்ணில் ஃப்ளாட்டான பிட்ச்சில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து தங்களது நாட்டை சேர்ந்த தரமான பவுலர்களை சவாலான பிட்ச்சில் எதிர்கொண்டு இதே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துமா என்பதை பார்க்கத்தான் போகிறோம் என்று ஸ்டீவ் ஸ்மித் சிரித்துக்கொண்டே எச்சரித்துள்ளார்.

Advertisement