சச்சினை வேண்டுமென்றே காயப்படுத்த பந்து வீசினேன் – உண்மையை உடைக்கும் முன்னாள் பாக் அதிரடி வீரர்

shoaib akhtar sachin tendulkar
- Advertisement -

பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் நட்சத்திர அதிரடி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது அசுர வேக பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த பெருமைக்குரியவர். வேகம் எனும் ஆயுதத்தை பயன்படுத்தி உலகின் அனைத்து இடங்களிலும் அதிரடியான வேகத்தில் பந்து வீசக்கூடிய இவர் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் என உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை பலமுறை திணறடித்து அவர்களை அவுட் செய்து வெற்றி கண்டவர். அதிலும் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக் போன்ற இந்திய வீரர்களை பார்த்தால் வேண்டுமென்றே வேகத்தில் பயம் காட்டுவதற்காக முடிந்த அளவுக்கு வேகமாக ஓடிவந்து அச்சுறுத்தலாக பந்து வீசுவார்.

Shoaib Akhtar Ricky Ponting

- Advertisement -

சொல்லப்போனால் 2000-ஆம் ஆண்டு வாக்கில் சச்சின் டெண்டுல்கர் – சோயப் அக்தர் ஆகிய இருவரும் மோதிக் கொண்டது இன்றும் பிரசித்தி பெற்ற ஒன்றாக இருக்கிறது. அதில் பெரும்பாலும் வேகத்தில் மிரட்டக் கூடிய சோயப் அக்தரை அதிரடியாக எதிர்கொள்ளும் சச்சின் டெண்டுல்கர் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பலமுறை பறக்கவிட்டு தக்க பதிலடி கொடுத்துள்ளார். எடுத்துக்காட்டாக 2003 உலக கோப்பையில் அவர் அடித்த சிக்ஸரை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

மிரட்டல் அக்தர்:
அதுபோன்ற தருணங்களில் கடுப்பாகும் சோயப் அக்தர் நோ-பால், ஒயிட் வாயிலாக ரன்கள் போனாலும் பரவாயில்லை என்று வேண்டுமென்றே மிரட்டலான பவுன்சர்களை வீசி பயமுறுத்த நினைப்பார். எதுவுமே கதைக்கு ஆகவில்லை என்றால் பீமர் பந்துகள் அதாவது தரையில் பிட்ச்சாகமல் நேரடியாக தலையை பதம் பார்க்கும் பந்துகளை முரட்டுத்தனமான வேகத்தில் வீசி பயத்தை காட்ட முயற்சிப்பார். ஏனெனில் அப்போதுதான் மனதளவில் அவர்களை பயமுறுத்தி ரன்களை எடுக்க விடாமல் செய்ய முடியும் என்று சமீபத்திய பேட்டியில் கூட அவர் தெரிவித்திருந்தார்.

Shoaib Akhtar Vs Balaji

ஆனால் அவை அனைத்தும் போட்டிக்காக மட்டுமே என்ற நிலைமையில் கடந்த 2006இல் கராச்சி நகரில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது சச்சினை அவுட் செய்யாமல் வேண்டுமென்றே காயப்படுத்தி பெவிலியனுக்கு அனுப்ப முயற்சித்ததாக சோயப் அக்தர் திடுக்கிடும் தகவலை தைரியமாக தெரிவித்துள்ளார். பொதுவாகவே சச்சினை அவுட் செய்தால் இந்தியா காலியாகிவிடும் என்ற நோக்கத்தில் அவரை அவுட் செய்வதற்கு அனைத்துப் பவுலர்களும் முழு மூச்சுடன் பந்து வீசுவார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட போட்டியில் சச்சினை காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பந்து வீசியதாக சோயப் அக்தர் மறைக்காமல் பேசியுள்ளார்.

- Advertisement -

வேண்டுமென்றே காயப்படுத்த:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதை முதல்முறையாக இப்போதுதான் வெளியில் சொல்கிறேன். ஒரு டெஸ்ட் போட்டியில் சச்சினை வேண்டுமென்றே அடிக்க நினைத்தேன். அந்தப் போட்டியில் எப்படியாவது அவரை காயப்படுத்தியே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அப்போட்டியில் சாதாரணமாக இன் ஃப்ரண்ட் ஆஃப் விக்கெட்டில் வீசுமாறு கேப்டன் இன்சமாம் தெரிவித்தார்”

“ஆனால் நான் சச்சினை அடிக்க நினைத்தேன். அதில் ஒருமுறை அவரை ஹெல்மெட்டில் அடித்தபோது அவர் முடிந்து விட்டதாக நினைத்தேன். ஆனால் வீடியோ ரீப்ளேயில் பார்த்தபோது அதில் சச்சின் தப்பி விட்டதை உணர்ந்தேன். இருப்பினும் தொடர்ச்சியாக அவரை காயப்படுத்த நினைத்தேன். ஆனால் மறுபுறம் இந்திய பேட்டிங் எங்களது மற்றொரு பவுலர் முகமது ஆசிப்புக்கு எதிராக தடுமாறி கொண்டிருந்தது. அந்த நாளில் சிறப்பாக பந்து வீச கூடிய ஒருவராக ஆசிப்பை பார்த்தேன்” என்று கூறினார்.

- Advertisement -

கடந்த 2006இல் டிராவிட் தலைமையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் முதல் 2 போட்டிகள் டிராவில் முடிந்ததால் கராச்சியில் நடந்த 3-வது போட்டியில் வென்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் இரு அணிகளும் போராடின. அந்த போட்டியில் தான் சச்சினை வேண்டும் என்று அவுட் செய்ய நினைத்ததாக தெரிவித்துள்ள சோயப் அக்தர் அதில் அவர் தப்பி விட்டதாகவும் கூறியுள்ளார்.

அந்த போட்டியின் முதல் ஓவரிலேயே இர்பான் பதான் ஹாட்ரிக் எடுத்து மிரட்டியதால் பாகிஸ்தான் 245 ரன்களுக்கு சுருண்டது. இருப்பினும் முகமது ஆசிப் பந்துவீச்சில் தாக்குபிடிக்க முடியாத இந்தியாவும் 238 ரன்களுக்கு சுருண்டது. அதன்பின் சிறப்பாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் 599/7 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து பின் அபாரமாக பந்துவீசி 341 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று 1 – 0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இதையும் படிங்க : எனக்கு மட்டும் சான்ஸ் தராம போயிருந்தா கங்குலிக்கு கேப்டன்ஷிப் போயிருக்கும் – முன்னாள் வீரர் பேச்சு

அப்போட்டியில் முதல் இன்னிங்சில் 23 (29) ரன்களுக்கு அப்துல் ரசாக்கிடம் அவுட்டான சச்சின் 2-வது இன்னிங்சில் 26 ரன்களில் முகமது ஆசிப்பிடம் அவுட்டானார். ஆனால் காயப்படுத்த நினைத்த சோயப் அக்தருக்கு கொஞ்சம் கூட சளைக்காமல் அவரின் தாக்குதலுக்கு அஞ்சாமல் காயமும் அடையாமல் அவரிடம் அவுட்டாகவில்லை என்பதே அவரின் திறமைக்கு சான்றாகும்.

Advertisement