பாகிஸ்தான் கூட பழகினால் இப்படி ஆகும், நியூஸிலாந்தை கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் என்ன?

Trent Boult NZ
- Advertisement -

விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக அதில் பங்கேற்கும் 16 அணிகளும் இறுதி கட்டமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் பக்கத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் அங்கு முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. கடந்த அக்டோபர் 7ஆம் தேதியன்று துவங்கிய இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும் என்ற அடிப்படையில் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் சொந்த மண்ணில் அசத்திய நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்ற தலா 4 போட்டிகளில் தலா 3 வெற்றிகளையும் 1 தோல்வியும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்து பைனலுக்கு முன்னேறியுள்ளன.

மறுபுறம் அடி வாங்குவதற்காகவே சென்றதை செயல்பட்ட வங்கதேசம் 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் உலக கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா பயணிக்க உள்ளது. முன்னதாக அக்டோபர் 12ஆம் தேதியன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற இத்தொடரின் 5வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து வங்கதேச பவுலர்களை சரமாரியாக அடித்து 20 ஓவர்களில் 208/5 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் ஃபின் ஆலன் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 32 (19) ரன்களில் அவுட்டாக மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே 5 பவுண்டரி 3 சிக்சருடன் 64 (40) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

எளிதான வெற்றி:
அதை தொடர்ந்து வந்த மார்ட்டின் கப்தில் தனது பங்கிற்கு 34 (27) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் மிடில் ஆர்டரில் மிரட்டிய கிளென் பிலிப்ஸ் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 60 (24) ரன்கள் குவித்து அசத்தினார். அதைத்தொடர்ந்து 209 என்ற கடினமான இலக்கை துரத்திய வங்கதேசம் நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாறியது. சாண்டோ 11, லிட்டன் தாஸ் 23, சௌமியா சர்கார் 23 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் போராடிய கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மட்டும் அதிகபட்சமாக 8 பவுண்டரி 1 சிக்சருடன் 70 (44) ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தார்.

இறுதியில் அடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 160/8 ரன்கள் மட்டுமே எடுத்த வங்கதேசம் 48 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றிக்கு 60 (24) ரன்கள் குவித்த கிளென் பிலிப்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அப்படி ரசிகர்களை மகிழ்வித்த அந்தப் போட்டியில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் நியூசிலாந்து வீரர்கள் பீல்டிங் செய்வதில் ஒரு கலகலப்பை ஏற்படுத்தினர்.

- Advertisement -

பாகிஸ்தான் பழக்கம்:
ஆம் அப்போட்டியில் நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர அதிரடி வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் வீசிய பவர் ப்ளே ஓவரில் வங்கதேச தொடக்க வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இறங்கி வந்து சிக்சர் அடிக்க முயன்றார். ஆனால் போல்ட் வீசிய அதிரடியான வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத அவர் பந்தை காற்றில் பறக்க விட்டார். அது நேராக தலைக்கு மேலே வானுயர பறந்து மீண்டும் கேட்ச்சாக மாறி கீழே வந்தது. அப்போது அதை பிடிக்க டிரென்ட் போல்ட், விக்கெட் கீப்பர் டேவோன் கான்வே, டிம் சௌதீ மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகிய 4 நியூசிலாந்து வீரர்கள் ஓடி வந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் போல்ட் பிடிப்பார் என்று பிலிப்ஸ் முயற்சியைக் கைவிட்ட நிலையில் அவர்கள் இருவரும் பிடிப்பார் என்று டேவோன் கான்வே மெதுவாக ஓடி வந்தார். பின்புறத்தில் அந்த மூவரும் பிடிப்பார்கள் என்று மெதுவாக ஓடி வந்த டிம் சவுத்தி அந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்தார். இருப்பினும் இறுதியில் யாருமே கேட்ச் பிடிக்காமல் விட்டது வர்ணனையாளர்களுக்கும் பார்த்த ரசிகர்களுக்கும் ஆச்சரியமாகவும் சிரிப்பையும் ஏற்படுத்தியது.

அதனால் பொதுவாகவே பாகிஸ்தான் வீரர்கள் தான் இது போன்ற குளறுபடிகளை செய்வார்கள் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் இந்த முத்தரப்பு தொடரில் அவர்களுடன் விளையாடி வருவதால் அவர்களது பழக்கம் நியூசிலாந்து வீரர்களுக்கும் ஒட்டிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கின்றனர். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் மாபெரும் இறுதி போட்டி அக்டோபர் 14ஆம் தேதியன்று இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெறுகிறது.

Advertisement