3 பக்கமும் இங்கிலாந்துக்கு அடி.. இந்தியாவுக்காக 92 வருடங்களில் நிகழாத சாதனையை செய்த ஜெய்ஸ்வால், ரோஹித், கில்

Indian Top 3 Batters
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 போட்டிகளில் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் வென்றுள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் துவங்கிய கடைசி போட்டியிலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை அபாரமாக பந்து வீசிய இந்தியா 218 ரன்களுக்கு சுருட்டியது.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதன் பின் களமிறங்கிய இந்தியா சிறப்பாக விளையாடிய இரண்டாவது நாள் முடிவில் 473/8 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை விட 225 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 57, கேப்டன் ரோஹித் சர்மா 103, சுப்மன் கில் 110, தேவ்தூத் படிக்கல் 65, சர்பராஸ் கான் 56 என டாப் 5 பேட்ஸ்மேன்கள் 15 வருடம் கழித்து 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து சாதனை படைத்தனர்.

- Advertisement -

அரிதான நிகழ்வு:
களத்தில் குல்தீப் யாதவ் 27*, ஜஸ்பிரித் பும்ரா 19* ரன்கள் எடுத்தனர். முன்னதாக இந்த தொடரில் 22 வயதாகும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 9 இன்னிங்ஸில் 712* ரன்கள் அடித்து இங்கிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளதை அறிவோம்.

அதே போல தடுமாற்றமாக செயல்பட்டாலும் முக்கிய நேரத்தில் தன்னுடைய அனுபவத்தை காட்டி 2 சதங்கள் அடித்துள்ள ரோகித் சர்மா இதுவரை களமிறங்கிய 5 போட்டிகளில் 9 இன்னிங்க்ஸில் 400* ரன்கள் குவித்துள்ளார். அவர்களைத் தொடர்ந்து 3வது இடத்தில் களமிறங்கி வரும் சுப்மன் கில் முதல் போட்டியில் சொதப்பலாக விளையாடி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் அணியிலிருந்து நீக்குமாறு விமர்சனங்களை சந்தித்தார்.

- Advertisement -

ஆனால் அதன் பின் சுதாரித்து ஆடும் அவரும் இதுவரை 5 போட்டிகளில் 9 இன்னிங்ஸில் 452* ரன்கள் அடித்துள்ளார். அந்த வகையில் ஜெய்ஸ்வால் 712*, ரோஹித் 400*, கில் 412* என இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களும் இந்த தொடரில் 400 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளனர். இப்படி ஒரு டெஸ்ட் தொடரில் டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்களும் 400+ ரன்கள் அடிப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க: இந்திய அணி அங்கேயே ஜெய்ச்சுட்டாங்க.. இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி கூட கஷ்டம் தான்.. அலெஸ்டர் குக்

கடந்த 1932 முதல் 92 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்திய அணிக்கு இதற்கு முன் இப்படி ஒரு தொடரில் டாப் 3 பேட்ஸ்மேன்களும் 400+ ரன்கள் அடித்ததில்லை. இதற்கு முன் கடந்த 1955/56ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் வினோ மன்கட், பாலி உம்ரிகர், பங்கஜ் ராஜ் ஆகிய டாப் 3 இந்திய வீரர்கள் அதுவும் 300+ ரன்கள் அடித்ததே முந்தைய அதிகபட்சமாகும்.

Advertisement