ஐசிசி டி20 உ.கோ வரலாற்றில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் முந்தைய செயல்பாடுகள் எப்படி – சிறப்பு பதிவு

ABD
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தங்களுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் அபார ஆட்டத்தால் தோற்கடித்து 2வது போட்டியில் நெதர்லாந்தை 56 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தினர். அதை தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் 3வது போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவை இந்தியா எதிர்கொள்கிறது.

இப்போட்டியில் வென்றால் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு 90% உறுதியாகிவிடும் என்பதால் முதலிரண்டு போட்டிகளைப் போலவே போராடி வெற்றி பெற இந்தியா தயாராகி வருகிறது. இருப்பினும் குயின்டன் டீ காக், டேவிட் மில்லர், ரபாடா, அன்றிச் நோர்ட்ஜெ போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட தென்னாப்பிரிக்கா இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் அணியாகவே திகழ்கிறது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்காவின் சவாலை சமாளித்து இந்தியா எப்படி செயல்பட்டுள்ளது என்ற வரலாற்று சுவடுகளை இந்த பதிவில் பார்ப்போம்:

- Advertisement -

1. சாம்பியன் வெற்றி: கடந்த 2007இல் நடைபெற்ற வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு செல்ல கட்டாயம் பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டிய நிலையில் டர்பன் நகரில் கிரேம் ஸ்மித் தலைமையிலான தென்னாப்பிரிக்காவை தோனி தலைமையிலான இந்தியா எதிர்கொண்டது.

அப்போட்டில் ரோகித் சர்மா 50* (40) தோனி 45 (33) ஆகியோரது உதவியுடன் இந்தியா நிர்ணயித்த 154 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா ஆர்பி சிங் 4 விக்கெட்கள், ஹர்பஜன்சிங் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்து வீசிய அற்புதமான பந்து வீச்சில் 116/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் அந்த வாழ்வா – சாவா போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வாழ்வை கண்ட இந்தியா பின்னர் அரையிறுதியில் வலுவான ஆஸ்திரேலியாவையும் ஃபைனலில் பரம எதிரியான பாகிஸ்தானையும் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது மறக்கவே முடியாது.

- Advertisement -

2. ஒரே தோல்வி: கடந்த 2009இல் இங்கிலாந்தில் நடைபெற்ற 2வது உலகக் கோப்பையில் நாட்டிங்கம் நகரில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா ஏபி டீ வில்லியர்ஸ் 63 (51) ரன்கள் எடுத்த உதவியுடன் நிர்ணயித்த 131 ரன்களை துரத்திய இந்தியா டேல் ஸ்டெயின் போன்ற தரமான பவுலர்களின் பந்து வீச்சில் 118/8 ரன்கள் மட்டுமே எடுத்து முதலும் கடைசியாக 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

3. ரெய்னாவின் வரலாறு: கடந்த 2010இல் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அரை இறுதிக்கு கூட செல்ல முடியாமல் வெளியேறிய இந்தியா தென்னாபிரிக்காவுக்கு எதிராக கிராஸ் ஐஸ்லைட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு அட்டகாசமாக பேட்டிங் செய்த சுரேஷ் ரெய்னா 9 பவுண்டரி 5 சிக்ஸருடன் டி20 கிரிக்கெட் மற்றும் டி20 உலக கோப்பையில் சதமடித்த முதல் இந்திய பேட்ஸ்மனாக சாதனை படைத்து 186/5 ரன்கள் குவிக்க உதவினார்.

- Advertisement -

அதை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு ஜேக் காலிஸ் எடுத்த 73 (54) ரன்களைத் தவிர ஏனைய வீரர்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் வெற்றி பெற முடியவில்லை.

4. திரில் வெற்றி: கடந்த 2012இல் இலங்கையில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் கொழும்புவில் நடைபெற்ற லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து சுரேஷ் ரெய்னா 44 (34), ரோஹித் சர்மா 25 (27) ஆகியோரது உதவியுடன் 152/6 ரன்கள் சேர்த்தது.

அதை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு டு பிளேஸிஸ் 65 (38) தவிர ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில் 14 ரன்கள் தேவைப்பட்டபோது கடைசி ஓவரை வீசிய தமிழக வீரர் லட்சுமிபதி பாலாஜி அல்பி மற்றும் மோர்னி மோர்கல் ஆகியோருக்கு எதிராக தலா 1 சிக்சர்களை கொடுத்தாலும் அவர்கள் இருவரையுமே அவுட்டாக்கி 1 பந்து மீதம் வைத்து இந்தியாவுக்கு 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்று கொடுத்தார்.

5. கோலியின் அசத்தல்: 2014 உலகக்கோப்பை செமி ஃபைனலில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 173 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு மாஸ்டர் க்ளாஸ் காட்டிய விராட் கோலி 72* (44) ரன்கள் குவித்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்து ஃபைனலுக்கு அழைத்து சென்றார். அப்போட்டியில் பினிஷிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தும் அதை விராட் கோலியிடம் தோனி வழங்கியதை ரசிகர்கள் மறக்க முடியாது. அதன்பின் இந்த உலகக்கோப்பையில் தான் இவ்விரு அணிகளும் மோதுகின்றன.

Advertisement