ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2007க்குப்பின் கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் விளையாட உள்ளது. முன்னதாக 2007 முதல் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்தியா சில மறக்க முடியாத தருணங்களை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தது.
அதில் டி20 உலகக் கோப்பையில் பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா பதிவு செய்த முதல் வெற்றியை ரசிகர்களால் மறக்கவே முடியாது. ஆம் அந்த உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்தியா தனது 2வது போட்டியில் பாகிஸ்தானை டர்பன் நகரில் எதிர்கொண்டது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 142 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
தோனியின் சாதூரியம்:
அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 50, கேப்டன் எம்எஸ் தோனி 33 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது ஆசிப் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சல்மான் பட் 17, இம்ரான் நசீர் 7, கம்ரான் அக்மல் 15, யூனிஸ் கான் 2, கேப்டன் சோயப் மாலிக் 20, ஷாஹித் அஃப்ரிடி 7 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகிய ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் முக்கிய நேரத்தில் மிஸ்பா-உல்-ஹக் அதிரடியாக 53 (35) ரன்கள் விளாசி வெற்றிக்கு போராடினார்.
அதனால் வெற்றியை நெருங்கிய பாகிஸ்தானுக்கு கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும் ஸ்ரீசாந்த் வீசிய அந்த ஓவரில் 5வது பந்தில் ரன் எடுக்காத மிஸ்பா கடைசி பந்தில் ரன் அவுட்டானதால் போட்டி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக கால்பந்து போல கிரிக்கெட்டில் வரலாற்றிலேயே முதல் முறையாக பவுல் அவுட் விதிமுறை கடைபிடிக்கப்பட்டது.
அந்த வினோதமான நிகழ்வில் முதல் பந்திலேயே இந்தியாவின் வீரேந்திர சேவாக் ஸ்டம்ப்பை பதம் பார்த்த நிலையில் பாகிஸ்தானின் அர்பாத் அடிக்காமல் கோட்டை விட்டார். அதே போல 2வது பந்தில் ஹர்பஜன் சிங் துல்லியமாக ஸ்டம்ப்பை தெறிக்க விட்ட நிலையில் பாகிஸ்தான் சார்பில் உமர் குல் மொத்தமாக தவற விட்டார். கடைசியில் இந்தியாவின் பகுதிநேர பவுலரான ராபின் உத்தப்பாவும் ஸ்டம்ப்பை துல்லியமாக அடித்து தொப்பியை கழற்றி ரசிகர்களிடம் பாராட்டுக்களை வாங்கினார்.
மறுபுறம் பாகிஸ்தானின் நம்பிக்கை நாயகன் சாகித் அஃப்ரிடியும் ஸ்டம்ப்பை அடிக்கத் தவறியதால் 3 – 0 (5) என்ற கணக்கில் பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா பவுல் அவுட் முறையில் வெற்றி கண்ட முதல் அணியாக சாதனை படைத்தது. அந்த நிகழ்வில் பாகிஸ்தான் கீப்பர் கம்ரான் அக்மல் ஸ்டம்ப்களுக்கு பின்னால் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார். ஆனால் இந்தியாவின் கீப்பர் தோனி மண்டியிட்டு அமர்ந்து சாதூரியமாக செயல்பட்டார்.
இதையும் படிங்க: தோல்வியால் கண்ணீர் விட்டு அழுத காவ்யா மாறனுக்கு அமிதாப் பச்சன் சொன்ன ஆறுதல் – விவரம் இதோ
அது இந்திய பவுலர்கள் குறி வைத்து ஸ்டம்பை அடித்து வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுக்க உதவியாக இருந்தது. அந்த வகையில் ரசிகர்கள் கனவிலும் நினைத்து பார்க்காத பவுல் அவுட் வெற்றியுடன் வித்தியாசமாக தொடரை துவங்கிய இந்தியா கடைசியில் அதே பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.