இன்னும் 90களிலேயே இருக்கோம்! நியாயமான ஆதங்கத்துடன் இந்திய மகளிர் அணியை விளாசும் முன்னாள் வீரர்

Women's IND
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டில் மிகுந்த பரபரப்பாக நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை மெக் லென்னிங் தலைமையிலான ஆஸ்திரேலியா வென்று சாதனை படைத்தது. கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று துவங்கிய இந்த உலக கோப்பையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 8 அணிகள் 31 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. அதில் முதலில் நடந்த லீக் சுற்றில் அசத்திய ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

Aus vs ENG Women's World Cup

- Advertisement -

அதை தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி சுற்றில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்த ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்த இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அந்த நிலையில் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் இங்கிலாந்தை 71 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 7வது முறையாக உலக கோப்பையை வென்று மகளிர் கிரிக்கெட்டில் தன்னை வெற்றிகரமான அணி என இந்த உலகிற்கு மீண்டும் பிரகடனப்படுத்தியது.

ஏங்கும் இந்திய ரசிகர்கள்:
இந்த வெற்றியால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை பார்த்து இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்துடன் காணப்படுகிறார்கள் என்றே கூறலாம். ஏனெனில் வரலாற்றில் கடந்த 1973 முதல் ஐசிசி மகளிர் உலகக் கோப்பைகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் இந்த வருடத்தையும் சேர்த்து 7 கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட்டில் ஒரு முடிசூடா அரசியாக விளங்குகிறது.

Women's World Cup 2022 Champion Aus 2

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து 4 கோப்பைகளை வென்றுள்ள இங்கிலாந்து, 1 கோப்பையை வென்றுள்ள நியூசிலாந்து ஆகிய அணிகளை தவிர உலகில் வேறு எந்த ஒரு அணியும் மகளிர் உலகக் கோப்பையை வென்றதே கிடையாது. அதேபோல் 5 டி20 உலக கோப்பைகளையும் அசால்டாக ஆஸ்திரேலியா வென்றுள்ளது. மொத்தமாக வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 22 ஐசிசி உலக கோப்பைகளில் 12 உலகக்கோப்பைகளை ஆஸ்திரேலியா வென்றுள்ளது என்பதை அறியும் இந்திய ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஏக்கம் ஏற்படுவதில் எந்தவித ஆச்சரியமுமில்லை. ஏனென்றால் வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட ஒரு உலக கோப்பையை கூட இந்திய மகளிர் அணி தொட்டதே கிடையாது.

- Advertisement -

கடைசியாக 2005, 2017 ஆகிய ஆண்டுகளில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பைகளிலும் 2020-ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையிலும் இறுதிப்போட்டி வரை சென்ற இந்தியா பரிதாபமாக தோற்று வெளியேறியது. ஒருபுறம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் ஜாலியாக உலக கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்துக் கொண்டிருக்க மறுபுறம் இறுதிப்போட்டிக்கே தகுதி பெறுவதற்கு இந்திய மகளிர் அணியினர் மண்ணை கவ்வி வருகிறார்கள். அந்த அளவுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் இன்னும் முன்னேறாமல் பரணி மேல் இருக்கும் பழைய தூசியடைந்த பொருளாகவே இருந்து வருகிறது.

indianwomescricket

90களிலேயே இருக்கோம்:
இந்த வருடம் கூட மிதாலி ராஜ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி பங்கேற்ற 7 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று 4 தோல்விகளுடன் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுறோடு வெறும் கையுடன் நாடு திரும்பியது பல ரசிகர்களையும் ஏமாற்றமடைய வைத்தது. இந்த வருடம் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா அதற்கு ஈடாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பலம் பொருந்திய அணிகளுக்கு எதிராக படு மோசமான தோல்விகளை சந்தித்து.

- Advertisement -

இதுபற்றி முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியது பின்வருமாறு. “இந்திய ஆடவர் அணி 90களில் எப்படி இருந்ததோ அதேபோல் தற்போதைய இந்திய மகளிர் அணி ஏதேனும் ஒரு தனிநபர் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற நிலையில் உள்ளது. துரதிஸ்டவசமாக இது தொடர்ச்சியான வெற்றிகளைக் எப்போதும் பெற்றுக் கொடுக்காது” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அவர் கூறுவது போல 90களில் இருந்த இந்திய ஆடவர் அணி ஏதேனும் ஒரு சிலர் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் இருந்தது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் சச்சின் டெண்டுல்கர் அடித்தால் இந்தியா வெற்றி இல்லையேல் தோல்வி என்ற நிலைமையில் அவர் அவுட்டான பின் இந்தியாவின் ஆஃப் செய்யப்பட்ட தொலைக்காட்சிகள் எத்தனையோ இருந்தது. அதேபோல் தற்போதைய இந்திய அணியிலும் ஹர்மன்ப்ரீட் கௌர், ஸ்மிருதி மந்தனா போன்ற ஒருசில வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி என்ற நிலைமை இருந்து வருகிறது.

- Advertisement -

செய்ய வேண்டியது:
மேலும் 40 வயதை நெருங்கிய மிதாலி ராஜ் ஓய்வு பெற மாட்டேன் என அடம் பிடித்து வருவதும் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படுகிறது. ஏனெனில் சிறப்பாக செயல்பட்டாலுமே மெதுவாக பேட்டிங் செய்யக் கூடியவராக இருக்கும் அவர் இந்திய பேட்டிங் துறைக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறார். அவரின் பேட்டிங் போலவே அவரின் கேப்டன்ஷிப்’பும் அதிரடியாக இல்லாமல் எதிரணி அச்சுறுத்தினால் உடனே வளைந்து கொடுப்பது போல இருந்து வருகிறது.

Womens

எனவே இந்தியாவின் வருங்காலத்தை கருத்தில்கொண்டு ஏற்கனவே பல உலக சாதனை படைத்த மித்தாலி ராஜ் போன்ற மூத்த வீராங்கனைகள் அடுத்த தலைமுறை வீராங்கனைகளுக்கு வழிவிட வேண்டும். அத்துடன் இந்திய மகளிர் அணி நிர்வாகமும் நிறைய இளம் வீராங்கனைகள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியான வாய்ப்புகளை அளித்து வளர்க்க வேண்டும்.

இவை அனைத்தையும் விட இன்று இந்திய ஆடவர் அணி உலகில் கொடிகட்டிப் பறப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள ஐபிஎல் தொடரின் மகளிர் வெர்சனை உடனடியாக பிசிசிஐ ஒவ்வொரு வருடமும் நடத்த வேண்டும்.

இதையும் படிங்க : தொடர்ச்சியான பேட்டிங் சொதப்பல் : ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்த – ருதுராஜ் கெய்க்வாட்

ஏனெனில் அந்த காலத்திலேயே வெள்ளையர்களை ஓட விட்ட சிங்கப்பெண்கள் கொண்ட இந்திய திருநாட்டில் உலகக் கோப்பையை வெல்வதற்கா பெண்களுக்கு பஞ்சம் ! நிச்சயமாக இல்லை. எனவே மகளிர் ஐபிஎல் தொடரை நடத்தி இளம் வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பளித்து வளர்த்தால் நிச்சயமாக மகளிர் உலகக் கோப்பையை இந்தியா முத்தமிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.

Advertisement