கடந்த மாதம் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இதன் காரணமாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததோடு மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தில் இருந்து சரிந்துள்ளது.
இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட இந்திய சீனியர் வீரர்கள் :
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு இன்னும் சில தினங்களில் பயணிக்கவுள்ள இந்திய அணியானது அங்கு நடைபெறவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றிகளை பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் என்பதனால் இந்த ஆஸ்திரேலிய தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.
இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதாவது ஆஸ்திரேலியா தொடரில் ஒருவேளை இந்திய அணி மீண்டும் சொதப்பி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் அவர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது தங்களது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் அவர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத பட்சத்தில் அணியின் நிர்வாகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான முடிவுகளை எடுக்கும்.
அந்த வகையில் ஒருவேளை இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால் நிச்சயம் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என பி.சி.சி.ஐ வட்டாரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்லும் பட்சத்தில் நிச்சயம் அதுவே சீனியர் வீரர்களான அவர்கள் நால்வருக்கும் கடைசி போட்டியாக இருக்கலாம்.
இதையும் படிங்க : டி20 உ.கோ ஜெயிச்ச இந்திய அணியா இது? உண்மையான அழகும் சவாலும் அங்க காத்திருக்கு.. யுவராஜ் சிங்
டி20 உலகக்கோப்பை தொடரின் வெற்றியோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து வெளியேறிய ரோஹித், விராட் மற்றும் ஜடேஜா போன்ற வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் வெற்றியோடு டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் இருந்தும் வெளியேறலாம் என்பதனால் இந்த ஆஸ்திரேலியா தொடரானது அவர்கள் நால்வருக்குமே மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



