தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. இருப்பினும் மூன்றாவது போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 2 – 1* (4) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
நவம்பர் 13ஆம் தேதி சென்சூரியன் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 220 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 107*, அபிஷேக் சர்மா 50 ரன்கள் குவித்தார்கள். பின்னர் விளையாடிய தென்னாபிரிக்கா 20 ஓவரில் 208-7 ரன்கள் குவித்து போராடி தோல்வியை சந்தித்தது.
அசத்திய இந்தியா:
அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 41, மார்கோ யான்சென் 54 ரன்கள் குவித்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் 3, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முன்னதாக அப்போட்டியில் அடித்த 219 ரன்களையும் சேர்த்து இந்த வருடம் இந்திய அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 8 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளது.
அதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக முறை 200க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு இந்தியா 7 முறை 200க்கும் ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனை. அதே போல 2024ஆம் ஆண்டு ஜப்பான் அணியும் 2022ஆம் ஆண்டு பர்மிங்காம் பியர்ஸ் அணியும் தலா 7 முறை 200க்கும் ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனை.
இந்தியாவின் சாதனை:
அத்துடன் இந்த வருடம் இந்திய அணி மொத்தம் 5 தனிநபர் சதங்களை பதிவு செய்துள்ளது. குறிப்பாக சஞ்சு சாம்சன் 2, திலக் வர்மா 1, அபிஷேக் சர்மா, ரோஹித் சர்மா 1 என மொத்தம் ஐந்து சதங்கள் அடித்துள்ளனர். அதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சதங்கள் அடித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது.
இதையும் படிங்க: சதம் அடித்த பிறகு ஓய்வைறையை பார்த்து முத்தங்களை பறக்கவிட்டது ஏன்? – திலக் வர்மா கொடுத்த விளக்கம்
இதற்கு முன் 2016ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் 2023ஆம் ஆண்டு இந்திய அணியும் தலா 5 சதங்கள் அடித்துள்ளன. அந்த வகையில் சாதனையுடன் இந்த போட்டியில் இந்தியா போராடி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து கடைசி போட்டி நவம்பர் 15ஆம் தேதி ஜோஹன்ஸ்பெர்க் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



