இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரில் கொல்கத்தா மற்றும் சென்னையில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அதனால் 2 – 0* என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருக்கும் நிலையில் மூன்றாவது போட்டி ஜனவரி 28ஆம் தேதி ராஜ்கோட் நகரில் இரவு 7 மணிக்கு துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் முகமது ஷமி விளையாடுவதாக சூரியகுமார் அறிவித்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் விளையாடி இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றிய அவர் அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
ஷமி இஸ் பேக்:
அதிலிருந்து குணமடைய ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொண்ட அவர் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களிலேயே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் ஷமி விளையாடாதது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அந்த நிலையில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய அவர் இந்தத் தொடரில் தேர்வு செய்யப்பட்டு முதல் 2 போட்டிகளில் விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இருப்பினும் தற்போது ஒரு வழியாக 14 மாதங்கள் கழித்து ஷமி விளையாட உள்ளார். மேலும் இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்றாலும் இங்கிருந்து இது 3 போட்டிகள் கொண்ட தொடர் என்று நினைத்துக்கொண்டு விளையாட உள்ளதாக சூரியகுமார் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
இந்திய அணி:
“நாங்கள் முதலில் பவுலிங் செய்கிறோம். பிட்ச் நன்றாகவும் கடினமாகவும் இருக்கிறது. எனவே அது நேரம் செல்ல செல்ல மாறாது என்று நினைக்கிறேன். ராஜ்கோட் எப்போதும் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கக்கூடியது. இம்முறையும் அது அப்படியே இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் கிரிக்கெட்டின் வித்தியாசமான பிராண்டை விளையாட விரும்புகிறோம். அதே சமயம் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நீங்கள் புரிந்து விளையாட வேண்டும்”
இதையும் படிங்க: ஐ.பி.எல் தவிர்த்து மற்ற டி20 லீக் தொடர்களில் எனக்கு விளையாட விருப்பம் இல்லை – டிராவிஸ் ஹெட் பேட்டி
“திலக் கடந்தப் போட்டியில் அதை நன்றாக செய்தார். இங்கிருந்து நாங்கள் 3 போட்டிகள் கொண்ட தொடராக இதைப் பார்க்கிறோம். அர்ஷ்தீப் ஓய்வு எடுக்கிறார், ஷமி உள்ளே வருகிறார்” என்று கூறினார். இந்திய அணி: சஞ்சு சாம்சன் (கீப்பர்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் (கேப்டன்), துருவ் ஜுரேல், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், முகமது ஷமி, ரவி பிஸ்னோய், வருண் சக்ரவர்த்தி



