ஹாங்காங் சிக்ஸ் 2024 தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணி.. கேதர் யாதவ் பேக்.. கேப்டன் யார் தெரியுமா?

Hong Kong
- Advertisement -

ஹாங்காங் கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஹாங்காங் சிக்ஸ் எனும் புதுமையான தொடரை மீண்டும் 7 வருடங்கள் கழித்து நடத்த உள்ளது. 1992இல் துவங்கப்பட்ட இந்த தொடர் கடைசியாக 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அந்தத் தொடரில் ஒரு அணியில் 6 வீரர்கள் மட்டுமே இருக்க முடியும். அந்த 6 வீரர்களில் கீப்பரை தவிர்த்து 5 வீரர்கள் தலா ஒரு ஓவர் வீச வேண்டும்.

ஒய்ட் மற்றும் நோபால் பந்துகள் 2 ரன்களாக கருதப்படும். 5 ஓவர்களுக்குள் 5 வீரர்களின் விக்கெட்டுகள் இழந்தால் முதலில் அவுட்டான பேட்ஸ்மேன் ரன்னராக வந்து 6வது பேட்ஸ்மேன் தொடர்ந்து விளையாட உதவலாம். ஆனால் 6வது விக்கெட்டும் விழுந்து விட்டால் இன்னிங்ஸ் முடிந்து விடும். அதே போல ஒரு பேட்ஸ்மேன் 31 ரன்கள் கடந்து விட்டால் அடுத்த வீரருக்கு வழி விட்டு ரிட்டயராகி செல்ல வேண்டும்.

- Advertisement -

இந்திய அணி அறிவிப்பு:

ரசிகர்களை கவர்வதற்காக இப்படி வேடிக்கையான விதிமுறைகளை கொண்ட இந்த தொடரில் இந்தியா ஒருமுறை ராபின் சிங் தலைமையில் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அணியில் கேதார் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களை கடுப்பேற்றுவதாக அமைகிறது.

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலும் தடவலாக விளையாடக்கூடிய அவர் ஒருமுறை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக பவுண்டரி அடிப்பது போல் பந்தை எண்ணினார். ஆனால் கடைசியில் அவுட்டான அவர் தோல்விக்கு முக்கிய காரணமானார். அதனால் ரசிகர்களின் கிண்டல்களை சந்தித்த அவர் சமீபத்தில் ஓய்வு பெற்ற நிலையில் சிக்ஸர்களாக அடித்து நொறுக்க வேண்டிய இந்தத் தொடரில் இந்தியாவுக்காக தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

உத்தப்பா கேப்டன்:

அவருடன் ஸ்டுவர்ட் பின்னி, மனோஜ் திவாரி, சபாஷ் நதிம், ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி ஆகியோரும் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர். இதில் உத்தப்பாவை தவிர்த்து மற்ற யாருமே பெரியளவில் டி20 கிரிக்கெட்டில் ஜொலிக்காதவர்கள் என்பது ரசிகர்களை ஏமாற்றமடைய வைப்பதாக இருக்கிறது. ஏனெனில் கடந்த காலங்களில் இத்தொடரில் தோனி, சச்சின், கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் இந்தியாவுக்காக விளையாடினர்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் இவர்தான்.. சூசகமாக அறிவித்த பி.சி.சி.ஐ

இதையடுத்து ராபின் உத்தப்பா தலைமையிலான இந்திய அணி இத்தொடரில் சி பிரிவில் இடம் பிடித்துள்ளது. நவம்பர் 1 முதல் 3 வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா தங்களுடைய லீக் சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதே தொடரில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற 12 அணிகள் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement