எதிர்வரும் அக்டோபர் 16-ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் துவங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொடர் முழுவதுமே கேப்டனாக செயல்படும் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டிக்கான கேப்டன் :
அந்த வகையில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை பற்றி ஹாட்ரிக் வெற்றியை பெரும் முனைப்புடன் தயாராகி வருகிறது.
அதேவேளையில் மீண்டும் ஒருமுறை இந்திய அணியிடம் சொந்த மண்ணில் தோல்வியை தழுவக்கூடாது என்று ஆஸ்திரேலியா அணியும் மும்முரமாக தயாராகி வருகிறது. இதன் காரணமாக இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்து வந்தது. ஏனெனில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரின் போது துணைக்கேப்டன் யார் என்பது அறிவிக்கப்படவில்லை.
அதனால் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் வேளையில் துணைக்கேப்டன் பதவியில் யார் இருக்கிறார்களோ? அவர்களே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியின் கேப்டனாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் நேற்று பிசிசிஐ-யின் மூலம் வெளியிடப்பட்ட நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக பும்ரா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க : 82க்கு ஆல் அவுட்.. பாகிஸ்தானை நாக் அவுட் செய்த ஆஸியிடம்.. தோற்றாலும் இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பிருக்கா?
இதன்காரணமாக ஆஸ்திரேலிய தொடருக்கான முதல் போட்டியில் நிச்சயம் பும்ரா தான் இந்திய அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது. மீதமுள்ள போட்டிகளில் ரோகித் சர்மா மீண்டும் வந்து விடுவார். ஏற்கனவே கடந்து 2022-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டும் டெஸ்ட் அணியை வழிநடத்திய பும்ரா தலைமையிலான இந்திய அணி அந்த போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



