ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. அதில் 2017 ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வென்ற பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. மறுபுறம் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாடுகிறது.
2008க்குப்பின் எல்லைப் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு செல்வதை முற்றிலுமாக நிறுத்தியுள்ள இந்தியா 2012க்குப்பின் இருதரப்பு தொடர்களிலும் மோதுவதை நிறுத்தியுள்ளது. அதன் காரணமாக இந்தத் தொடரிலும் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாட மறுத்து விட்டது. அதில் இந்தியாவை விளையாட வைப்பதற்கு பாகிஸ்தான் வாரியம் கடந்த பல மாதங்களாக கடுமையாக போராடியது.
பாகிஸ்தான் பதிலடி:
ஆனால் பாகிஸ்தானில் அடிக்கடி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகள் நடைபெறுவதால் அந்நாட்டிற்கு சென்று விளையாட முடியாது என்று இந்தியா உறுதியாக தெரிவித்து விட்டது. மேலும் தங்களுடைய கேப்டன் ரோஹித் சர்மாவை கூட ஓபனிங் போட்டிக்காக பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று இந்தியா கரராக கூறிவிட்டது. அதன் காரணமாக இந்தியா விளையாடும் போட்டிகளை துபாயில் நடத்துவதற்கு ஐசசி முடிவெடுத்தது.
அதே சமயம் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வந்து விளையாடாது என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. அந்தத் தொடரில் பாகிஸ்தான் தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாட உள்ளது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி துவங்க உள்ள லாகூர் மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ரசிகர்கள் அதிருப்தி:
அதன் ஒரு பகுதியாக தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் தேசியக்கொடிகளும் மைதானத்தில் பறக்க விடப்பட்டுள்ளன. மேலும் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் பெயர்களும் ஆங்காங்கே பொறிக்கப்பட்ட உள்ளன. ஆனால் அதில் இந்தியாவை மொத்தமாக பாகிஸ்தான் புறக்கணித்துள்ளது.
அதாவது இந்தியாவின் மூவர்ணக் கொடியை லாகூர் மைதானத்தில் பறக்க விடாத பாகிஸ்தான் தங்கள் நாட்டுக் கொடியுடன் மற்ற 6 நாடுகளின் கொடியை பறக்க விட்டுள்ளது. அதே போல இந்தியா என்ற பெயரும் பாகிஸ்தான் மைதானங்களில் எங்கேயும் பொறிக்கப்படவில்லை. அந்த புகைப்படங்கள் மற்றும் சிறிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: இனி என்ன நடந்தாலும் ரோஹித்திற்கு வாய்ப்பில்லை.. முக்கிய முடிவை எடுத்த பி.சி.சி.ஐ – என்ன நடந்தது?
இதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் ஓஹோ இந்த வழியில் எங்களுக்கு பதிலடி கொடுக்கிறீர்களா என்று பாகிஸ்தான் வாரியத்தை கலாய்க்கிறார்கள். இதைத்தொடர்ந்து இந்தியா தங்களது முதல் போட்டியில் பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அடுத்ததாக 23ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள குறிப்பிடத்தக்கது.



