
தமிழகத்தை சேர்ந்த இளம் இடதுகை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 700 ரன்களுக்கு மேல் குவித்து அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருந்தார். அவரது பேட்டிங் டெக்னிக் மற்றும் திறமை ஆகியவற்றை கருத்தில் கொண்ட இந்திய அணியும் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பினை வழங்கியது.
அந்த வகையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி விளையாடிய அவர் மூன்று போட்டிகளில் பங்கேற்று ஒரு அரைசதம் மட்டுமே அடித்து 140 ரன்களை மட்டுமே குவித்து ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் எதிர்கால வீரராக பார்க்கப்படும் அவருக்கு தற்போது இந்திய மண்ணில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி வாய்ப்பு வழங்கியுள்ளது.
ஆனால் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சாய் சுதர்சன் வீணடித்து விட்டார் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் விளையாடிய அவர் 19 பந்துகளை சந்தித்து 7 ரன்களை மட்டுமே எடுத்து மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்துள்ளார்.
மிகவும் திறமை வாய்ந்த வீரராக பார்க்கப்படும் அவர் இப்படி தொடர்ச்சியாக அவர் ஏமாற்றத்தை அளித்துள்ளது வருவது ரசிகர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அவரது ஷாட் செலக்சன் மோசமாக இருப்பதாகவும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படி தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் சாய் சுதர்சனுக்கு பதிலாக திலக் வர்மாவை டெஸ்ட் அணிக்குள் கொண்டு வரலாம் என்று ரசிகர்கள் சில புள்ளி விவரங்களை முன்வைத்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதாவது உள்நாட்டு டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன் இதுவரை 34 முதல்தர போட்டிகளில் விளையாடி 2345 ரன்கள் அடித்துள்ளார். அதில் 8 அரைசதம் மற்றும் 8 சதங்கள் அடங்கும். ஆனாலும் அவரது சராசரி 40 ரன்களாக மட்டுமே உள்ளது. அதேவேளையில் திலக் வர்மாவை பொறுத்தவரை 22 முதல்தர போட்டிகளில் 7 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் என 1562 ரன்கள் குவித்துள்ளார்.
இதையும் படிங்க : கொஞ்சம் ஸ்லோ தான்.. இருந்தாலும் டீமுக்கு அதுதான் தேவைன்னு புரிஞ்சி திலக் வர்மா அசத்திட்டாரு – ஏ.பி.டி பாராட்டு
ஆனால் முதல்தர கிரிக்கெட் அவருடைய சராசரி 52.06 ஆக இருக்கிறது. இப்படி சாய் சுதர்சனை விட அதிக ஆவரேஜ் கொண்ட திலக் வர்மாவை டெஸ்ட் அணிக்குள் கொண்டு வந்தால் ஆடுகளத்தின் தன்மை மற்றும் ஆட்டத்தின் சூழ்நிலை இரண்டையும் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விளையாடுவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.