ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் கொண்டுள்ளது. அங்கு நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்கியுள்ளது.
ஆனால் ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியிலேயே அபாரமாக செயல்பட்ட ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. குறிப்பாக முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே வெறும் 116 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை சேசிங் செய்த இந்தியா ஆரம்பம் முதலே சுமாராக பேட்டிங் செய்து 19.5 ஓவரில் 102 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அவமானத் தோல்வியை சந்தித்தது.
அதிருப்தி கொண்டாட்டம்:
ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு கூட ஜிம்பாப்வே அணி தகுதி பெறவில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஜிம்பாப்வே அணியிடம் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா தோல்வியை சந்தித்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக அந்தப் போட்டியில் 22/4 என இந்தியா தடுமாறிய போது அறிமுகமாக களமிறங்கிய துருவ் ஜுரேல் நிதானமாக விளையாடி 6 (14) ரன்கள் அடித்து வெற்றி பெற வைக்க போராடினார்.
இருப்பினும் லுக் ஜாங்வே வீசிய 10வது ஓவரின் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடிக்க முயற்சித்த அவர் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் அப்போது தம்முடைய காலில் போட்டிருந்த காலணியை கழற்றிய லுக் ஜாங்வே அதை காதில் வைத்து “இந்த பையனின் விக்கெட்டை எடுத்து விட்டேன்” என்று மொபைலில் பேசுவது போல கொண்டாடினார். அவருடைய இந்த கொண்டாட்டம் இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
ஏனெனில் துருவ் ஜுரேல் அந்தப் போட்டியில் தான் அறிமுகமானார். எனவே அறிமுகப் போட்டியில் அனுபவமில்லாத வீரரிடம் இப்படி அவமானப்படுத்தும் வகையில் கொண்டாடலாமா? என்று லுக் ஜாங்வே மீது இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். மொத்தத்தில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச இலக்கை கட்டுப்படுத்தி முதல் போட்டியில் ஜிம்பாப்வே உலக சாதனை வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: இந்திய டி20 அணியில் விராட் கோலியின் 3 ஆம் இடத்திற்கு சாய் சுதர்சன் சரியாக பொருந்துவார் – 3 காரணங்கள் இதோ
இதைத் தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது போட்டி ஜூலை 7ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஹராரே நகரில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்று ஜிம்பாப்பே அணிக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் செய்த தவறை திருத்திக் கொண்டு இந்திய வீரர்கள் வெற்றிக்காக களமிறங்க உள்ளனர்.



