ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஆனால் அந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே ஜிம்பாப்வே அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அப்போது எங்களை கலாய்த்த உங்களுடைய நிலைமை என்னவாயிற்று? என்று இந்திய அணியை பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர்.
ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றிருந்தது. மறுபுறம் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு கூட ஜிம்பாப்வே தகுதி பெறவில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஜிம்பாப்வே அணியிடம் சீனியர்கள் இல்லாமல் இளம் வீரர்களின் சுமாரான ஆட்டத்தால் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா தோல்வியை பதிவு செய்தது.
ஃபிளாட்டான பிட்ச்:
அந்த சூழ்நிலையில் ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் ஜிம்பாப்வே அணியை அடித்து நொறுக்கிய அபிஷேக் ஷர்மா 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் 100 (47) ரன்கள் விளாசினார். அவருடன் ருதுராஜ் கெய்க்வாட் 77* ரன்களும் ரிங்கு சிங் 48* ரன்களும் விளாசியதால் ஜிம்பாப்வே வெற்றி பெறுவதற்கு இந்தியா 235 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய ஜிம்பாப்வே ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் அதிரடியாக விளையாட முடியாமல் 134 ரன்களுக்கு சுருண்டது.
அதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்து தொடரை சமன் செய்தது. இந்நிலையில் அப்போட்டியில் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் ஆகியோருக்கு ஐபிஎல் தொடரை போல ஃபிளாட்டான பிட்ச் கிடைத்ததாலேயே அதிரடியாக விளையாடியதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜுனாய்ட் கான் தெரிவித்துள்ளார்.
எனவே புதிதாக ஒன்றும் சாதித்து விடவில்லை என்று தெரிவிக்கும் அவர் இந்திய பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் போன்ற ஃபிளாட்டான பிட்ச்களில் மட்டுமே அடித்து நொறுக்குவார்கள் என்று மறைமுகமாக கலாய்த்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “அபிஷேக் மற்றும் கெய்க்வாட் நன்றாக பேட்டிங் செய்தார்கள். இதை பார்க்கும் போது ஐபிஎல் பிட்ச்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பது போல் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தப்பா நினைக்காதீங்க.. உங்கள அவமானப்படுத்தல.. காலணியுடன் கொண்டாடியது பற்றி ஜிம்பாப்வே வீரர் விளக்கம்
அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் முதல் போட்டி நடைபெற்ற அதே ஹராரே பிட்ச்சில் தான் 2வது போட்டியும் நடைபெற்றது என்பது உங்களுக்கு தெரியாதா? என்று அவருக்கு பதிலடி கொடுக்கின்றனர். அத்துடன் தார் ரோட் போன்ற ஃபிளாட்டான பிட்ச்களில் கூட பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அடிக்காததால் இங்கிலாந்திடம் சொந்த மண்ணில் பாகிஸ்தான் தோற்றத்தை மறந்து விடாதீர்கள் என்றும் அவருக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.



