IND vs WI : இந்திய அணியில் மட்டும் என்ன குறை, உங்களுக்கு சுதந்திரம் இல்லையா? சொதப்பும் சீனியர் வீரரை விளாசும் ரசிகர்கள்

Ajinkya Rahane 3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அந்த நிலையில் ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் துவங்கிய வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா மீண்டும் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி முதல் நாள் முடிவில் 288/4 ரன்கள் எடுத்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.

குறிப்பாக கடந்த போட்டியை போலவே 139 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களும் ஜெய்ஸ்வால் 57 ரன்களும் எடுக்க மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தன்னுடைய 500வது போட்டியில் 87* ரன்களும் ரவீந்திர ஜடேஜா 36* ரன்களும் எடுத்து இந்தியாவை வலுப்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த போட்டியில் 3வதாக களமிறங்கிய இளம் வீரர் சுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருந்தும் 10 ரன்கள் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததை விட துணை கேப்டன் ரகானே 36 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்களில் இன்சைட் எட்ஜ் வாங்கி க்ளீன் போல்ட்டாகி சென்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

சுதந்திரம் இல்லையா:
ஏனெனில் 2011இல் அறிமுகமாகி 2015 உலகக் கோப்பையில் முதன்மை வீரராக விளையாடி அதன் பின் தடுமாற்றமாக செயல்பட்டதால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்ட அவர் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வந்தார். குறிப்பாக 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் கேப்டனாக பொறுப்பேற்று சதமடித்து 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் அதன் பின் சதமடிக்காமல் தடுமாறியதால் கடந்த 2022 பிப்ரவரியில் கழற்றி விடப்பட்டார்.

அப்போது வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்போம் என தேர்வுக்குழு அறிவித்ததால் அவருடைய கேரியர் முடிந்ததாக கருதப்பட்டது. இருப்பினும் மனம் தளராமல் போராடி ரஞ்சிக்கோப்பையில் இரட்டை சதமடித்த அவர் ஐபிஎல் 2023 தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் வித்தியாசமான ஷாட்டுகளை அடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பினார்.

- Advertisement -

மறுபுறம் ஸ்ரேயாஸ், விஹாரி ஆகியோர் காயமடைந்ததால் அதிர்ஷ்டமாக 15 மாதங்கள் கழித்து கம்பேக் கொடுத்த அவர் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விராட் ரோஹித் ஆகியோர் தடுமாறிய போது 89 ரன்கள் குவித்து குறைந்தபட்சம் இந்தியாவை இன்னிங்ஸ் அவமான தோல்வியிலிருந்து காப்பாற்றினார். அதனால் இத்தொடரில் மீண்டும் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்ட அவர் 3 (11), 8 (36) என பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவே இந்த தொடரில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியுள்ளது தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது.

மேலும் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணியில் தமக்கு சுதந்திரமாக விளையாடுவதற்கு அனுமதியும் ஆதரவும் கொடுத்ததே சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுக்க உதவியதாக ரகானே தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அழுத்தமற்ற இந்த தொடரில் இந்தியாவுக்காக விளையாடும் போது மட்டும் சுதந்திரம் இல்லையா என ரசிகர்கள் அவர் மீது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர்.

- Advertisement -

சொல்லப்போனால் ஐபிஎல் 2023 முதல் 3 – 4 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்க விட்ட அவர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வாய்ப்பு கிடைத்த அடுத்த போட்டியிலிருந்து மீண்டும் தடுமாறியது சென்னை ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். இருப்பினும் ஐபிஎல் ஃபைனலில் முக்கியமான ரன்களை எடுத்து அசத்திய அவர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆரம்பத்திலேயே நோ-பால் மற்றும் 2 கேட்ச் அதிர்ஷ்டத்திலிருந்து தப்பியே 89 ரன்கள் அடித்தார்.

இதையும் படிங்க:புதிய மாஸ் ஓப்பனிங் ஜோடியாக மிரட்டும் ரோஹித் – ஜெய்ஸ்வால், 24 வருடத்துக்கு பின் படைத்த வரலாறு உட்பட 3 சாதனைகள் இதோ

ஒருவேளை அப்போட்டியில் அந்த ஒரு இன்ச் நோ-பால் இல்லாமல் இருந்திருந்தால் புஜாரா போல இவரும் இந்நேரம் கழற்றி விடப்பட்டிருப்பார் என்றே சொல்லலாம். அதனால் வரும் டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெறும் முக்கிய டெஸ்ட் தொடரிலும் ரகானே விளையாடுவார் என்று இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளதே ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் அம்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement