ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு பயணித்து 3 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக பாகிஸ்தான் மண்ணில் 17 வருடங்கள் கழித்து இங்கிலாந்து விளையாடுவதால் அனைவரது எதிர்பார்ப்பை எகிற வைத்த இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 1ஆம் தேதியன்று ராவில்பிண்டி நகரில் தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் பவுலர்களுக்கு கருணை காட்டாமல் முதல் ஓவரிலிருந்தே அதிரடி சரவெடியான பவுண்டரிகளை பறக்க விட்டு எக்ஸ்பிரஸ் வேகத்தில் ரன்களை குவிக்க துவங்கியது.
குறிப்பாக தொடக்க வீரர்கள் பென் டன்கட் – ஜாக் கிராவ்லி ஆகியோர் இது டெஸ்ட் போட்டி என்று மறக்கும் அளவுக்கு டெஸ்ட் போட்டியில் டி20 இன்னிங்ஸ் விளையாடி 233 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதில் பென் டன்கட் 15 பவுண்டரியுடன் 107 (110) ரன்களும் ஜாக் கிராவ்லி 21 பவுண்டரியுடன் சதமடித்து 122 (111) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.
152 – 172 சேர்ந்து:
அவருக்குப் பின் ஜோ ரூட் 23 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு வீரர் ஓலி போப் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி 14 பவுண்டரியுடன் சதமடித்து 108 (104) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் ஜோ ரூட் அவுட்டானதும் களமிறங்கிய இளம் அண்டர்-19 வீரர் ஹரி ப்ரூக் தனது ஸ்டைலில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்து முரட்டுத்தனமாக பேட்டிங் செய்தார். அவரது அதிரடியால் 75 ஓவரிலேயே 506/4 ரன்கள் எடுத்த இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளிலேயே 500 ரன்களை கடந்த அணியாக சாதனை படைத்த போது புதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிந்தது.
களத்தில் ஹரி ப்ரூக் 101* (81) ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 34* (15) ரன்களும் இருப்பதால் ஏற்கனவே தார் ரோடு போல அமைக்கப்பட்டுள்ள பிட்ச்சில் சுமாராக பந்து வீசிய பாகிஸ்தான் பவுலர்களின் நிலைமை நாளை என்ன ஆகுமோ என்ற கவலை அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பொதுவாகவே உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்ட அணியாக கருதப்படும் பாகிஸ்தான் பவுலர்களில் இன்று யாருமே சிறப்பாக செயல்படாமல் ரண்களை வாரி வழங்கினார்கள்.
குறிப்பாக அறிமுக போட்டியில் களமிறங்கிய ஜாஹிட் முஹமது 2 விக்கெட்டுகளை எடுத்தாலும் 160 ரன்கள் கொடுத்த நிலையில் ஹாரீஸ் ரவூப் உள்ளிட்ட இதர பவுலர்களும் 6க்கும் மேற்பட்ட எக்கானமியில் ரன்களை வாரி வழங்கினார்கள்.மேலும் 75 ஓவர்களில் வெறும் 3 மெய்டன் ஓவர்கள் வீசும் அளவுக்கு பாகிஸ்தானின் பந்து வீச்சு மோசமாக இருந்தது. அந்தளவுக்கு ஸ்டோக்ஸ் – மெக்கல்லம் ஆகியோர் தலைமையில் ஏற்கனவே அதிரடிப்படையாக மாறியுள்ள இங்கிலாந்து லோக்கல் பவுலர்களை போல் பாகிஸ்தான் பவுலர்களை இப்போட்டியில் வெளுத்து வாங்கினார்கள்.
அதனால் இங்கிலாந்து 152/0 ரன்களை எடுத்த போதும் 172/0 ரன்களை எடுத்த போதும் காத்திருந்து ஸ்கிரீன் ஷாட் எடுத்த இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானை தற்போது சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகிறார்கள். ஏனெனில் 2021 டி20 உலக கோப்பையில் 152/0 ரன்களை விக்கெட் விடாமல் சேசிங் செய்த பாகிஸ்தான் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்து சரித்திர வெற்றி பெற்றது. அப்போது முதலே ஏதேனும் ஒரு போட்டியில் இந்தியாவின் பவுலிங் சுமாராக இருந்தால் உடனே அதை தூக்கிக் கொண்டு பாகிஸ்தான் ரசிகர்கள் வருவார்கள்.
போதாக்குறைக்கு 2022 டி20 உலக கோப்பை செமி பைனலில் 172/0 ரன்களை விக்கெட் இழப்பின்றி சேசிங் செய்த இங்கிலாந்து இந்தியாவை தோற்கடித்ததை வைத்து சமீப காலங்களில் பாகிஸ்தான் பிரதமர், சோயப் பக்தர் போன்ற முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் 152/0, 172/0 என்று இந்தியாவை கலாய்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
அந்த நிலையில் இப்போட்டியில் முரட்டு அடி வாங்கியதால் நாங்களாவது வெளிநாட்டு மண்ணில் அதுவும் டி20 போட்டிகளில் தான் ரன்களை கொடுத்தோம் ஆனால் நீங்கள் சொந்த மண்ணில் அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவ்வளவு ரன்களை கொடுத்துள்ளீர்களே என்று பாகிஸ்தானை இந்திய ரசிகர்கள் பதிலுக்கு கலாய்த்து வருகிறார்கள். மேலும் என்னடா இது உலகத்தரம் வாய்ந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு வந்த சோதனை என்றும் காலாய்க்கும் ரசிகர்கள் நாளை 1000 ரன்களை தொடாமல் மானத்தை காப்பாற்றிக் கொள்ளுமாறு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.



