இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது வரை சிறப்பான ஆட்டத்தை விளையாடி உள்ளது. போட்டியின் ஐந்தாம் நாளான இன்று நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருவதால் கடைசி நாளிலும் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 345 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 234 ரன்களை குவித்தது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 296 ரன்கள் குவித்திருக்க தற்போது இரண்டாவது இன்னிங்சில் 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் முதல் இன்னிங்சில் 105 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 65 ரன்களை குவித்து இந்திய அணி இந்த சிறப்பான நிலைமைக்கு வர பெரிய காரணமாக திகழ்ந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இரண்டாவது போட்டியின்போது கேப்டன் கோலி அணிக்குள் வருவதால் ஷ்ரேயாஸ் ஐயர் தனது இடத்தை இழக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரை அணியிலிருந்து வெளியேற்றக் கூடாது என்றும் அவருக்கு பதிலாக ரஹானேவை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஏனெனில் முதலாவது இன்னிங்சில் 35 ரன்கள் அடித்த ரகானே, 2வது இன்னிங்சில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதுதவிர கடைசியாக அவர் விளையாடிய பல போட்டிகளில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளதால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : நான் நெனச்சத தான் டிராவிட் சார் சொன்னார். அதுவே எனது சிறப்பான பேட்டிங்கிற்கு காரணம் – ஷ்ரேயாஸ் ஐயர்
அதுமட்டுமின்றி டெஸ்ட் அணியில் அவர் துணைக்கேப்டனாக இருப்பதால் மட்டுமே தொடர்ந்து நீடித்து வருவதாகவும், இனி அவரை துணைக்கேப்டன் பதவியிலிருந்தும் நீக்கி ஒரு இளம் வீரருக்கு அந்த பதவியை கொடுத்து அவரை அணியில் தொடரும் வைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.