IPL 2023 : இதுல கூடவா ஷாஹீன் அப்ரிடியை காப்பி அடிப்பீங்க, அர்ஷிதீப்பை கலாய்த்த பாக் ரசிகர்கள் – இந்திய ரசிகர்கள் மாஸ் பதிலடி

Shaheen Afridi Arshdeep Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க வந்துள்ள 2023 ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று நடைபெற்ற 2 போட்டிகளில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 2வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 191/5 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக பனுக்கா ராஜபக்சா 50 (32) ரன்களும் கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்களும் சாம் கரண் 26* (17) ரன்களும் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக டிம் சௌதீ 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து 192 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு மந்தீப் சிங் 2, அங்குள் ராய் 4 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அர்ஷிதீப் சிங் ஸ்விங் வேகப்பந்துகளில் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து சென்றனர். அதனால் தடுமாறிய அந்த அணிக்கு வெங்கடேஷ் ஐயர் 34 (28) கேப்டன் நிதிஷ் ராணா 24 (17) ஆண்ட்ரே ரசல் 35 (19) என முக்கிய வீரர்கள் அதிரடியாக பேட்டிங் செய்தாலும் அதை பெரிய ரன்களாக மாற்றாமல் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

காப்பி அடித்தாரா:
அதனால் 16 ஓவரில் 146/7 என அந்த அணி தடுமாறிய போது ஜோராக வந்த மழை போட்டியை மொத்தமாக தடுத்து நிறுத்தியது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி 7 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த பஞ்சாப் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்ததை தொடர்ந்து அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்த அர்ஷிதீப் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார். கடந்த சில வருடங்களாகவே பஞ்சாப் அணியில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த வருடம் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் புதிய பந்தில் ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுப்பவராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.

குறிப்பாக 2022 டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளராக அசத்திய அவர் ஜஹீர் கானுக்கு பின் இந்தியாவின் நீண்ட தேடலான தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கு தீர்வாக இருப்பார் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் ஏற்படுத்தினார். ஆனால் அதன் பின் சமீபத்திய டி20 தொடர்களில் நோபால்களை போட்டு மோசமான உலக சாதனை படைத்த அவர் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் முதல் போட்டியில் அசத்தலாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் தன்னுடைய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை எடுத்த அர்ஷிதீப் சிங் 16வது ஓவரில் வெங்கடேஷ் ஐயரை அவுட் செய்து மொத்தம் 3 விக்கெட்டுகளை எடுத்த போதும் அதை தனது 2 கை விரல்களில் முத்தமிட்டு பின்னர் 2 கையையும் பக்கவாட்டில் மேலே நோக்கி உயர்த்தி கொண்டாடினார். அதை பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் தங்களது நாட்டின் அதிரடி இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் அப்ரிடி ஒவ்வொரு முறையும் விக்கெட் எடுக்கும் போது கொண்டாடும் ஸ்டைலை அப்படியே அப்பட்டமாக காப்பி அடித்து அர்ஷிதீப் சிங் கொண்டாடுவதாக சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே கலாய்த்து வம்பிழுத்தார்கள்.

ஆனால் அதற்கு 2000ஆம் ஆண்டே அறிமுகமாகி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்த மகத்தான ஜஹீர் கானை பார்த்து தான் உங்களுடைய ஷாஹீன் அப்ரிடி காப்பி அடித்ததாக பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்திய ரசிகர்கள் மாஸ் பதிலடி கொடுத்து வருகிறார்கள். ஏனெனில் ஆரம்ப காலம் முதலே ஜஹீர் கான் விக்கெட்டுகளை எடுக்கும் போதெல்லாம் பெரும்பாலான சமயங்களில் தனது கைகளை முத்தமிட்டு பின்னர் மேலே நோக்கி உயர்த்தி கொண்டாடுவது வழக்கமாகும்.

இதையும்  படிங்க:IPL 2023 : ரிஷப் பண்டிற்காக மைதானத்தில் ரிக்கி பாண்டிங் செய்த மரியாதை – சூப்பர் தகவல் இதோ

அந்த வகையில் ஷாஹின் அப்ரிடி கொண்டாடும் போதெல்லாம் நாங்கள் எதுவுமே சொல்லவில்லை ஆனால் கிட்டத்தட்ட அதே போல அர்ஷிதீப் சிங் கொண்டாடும் போது உங்களுக்கு மட்டும் ஏன் இந்த அகம்பாவம் என்று பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement