36 ஆல் அவுட் நியாபகம் இருக்கா? வாயை விட்டு மாட்டிய ஆஸ்திரேலியாவை வெச்சு செய்த இந்தியர்கள் – நடந்தது என்ன

INDvsAUS
- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் துவங்குகிறது. அத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்று வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா போராட உள்ளது. மறுபுறம் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா கடந்த 2 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்களில் தங்களது சொந்த மண்ணில் வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்த அவமான தோல்விகளை பரிசளித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க போராட உள்ளது.

ஆனால் கிரிக்கெட்டின் அசுரனாக கருதப்படும் ஆஸ்திரேலியாவை சமீப காலங்களாகவே அடக்கி ஆளும் அணியாகவே இந்தியா ஜொலித்து வருகிறது. ஏனெனில் 2014க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை நடைபெற்ற அனைத்து தொடர்களையும் இந்தியா வென்று வருகிறது. இந்நிலையில் 2020/21 தொடரில் இந்தியா 36க்கு ஆல் அவுட்டான வீடியோவை பதிவிட்டுள்ள ஆஸ்திரேலிய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதாக ரசிகர்களுக்கு நினைவு படுத்தியது.

- Advertisement -

இந்தியர்கள் பதிலடி:
அதைப் பார்த்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா “ஆரம்பத்தை மட்டும் சொன்னால் எப்படி அத்தொடரின் இறுதி முடிவையும் சொல்லுங்கள்” என்று ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அத்துடன் “ஆம் இந்தியாவின் மிகச்சிறந்த கம்பேக் வெற்றியை பதிவு செய்து காபா கோட்டையை உடைத்து மூவர்ண கொடியை பறக்க விட்டது எங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறது” என்று இந்திய ரசிகர்கள் விதவிதமான பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

ஏனெனில் 2018/19இல் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா சரித்திரம் படைத்தது. ஆனால் அந்தத் தொடரில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் தடை பெற்றிருந்ததால் பலவீனமான அணியை தோற்கடித்து விட்டீர்கள் என்று ஆஸ்திரேலிய ரசிகர்களும் ஊடகங்களும் வசை பாடின. அந்த நிலையில் 2020/21ஆம் ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த இந்தியா அடிலெய்ட் நகரில் நடைபெற்ற முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தாக்குப் பிடித்தாலும் 2வது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு சுருண்டு வரலாற்றில் மோசமான தோல்வியை சந்தித்து அவமானத்திற்கு உள்ளானது.

- Advertisement -

போதாக்குறைக்கு கேப்டன் விராட் கோலியும் தனது குழந்தை பிறப்பதற்காக நாடு திரும்பியதால் இந்தியாவின் கதை முடிந்தது என்று நிறைய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பேசினார்கள். ஆனால் அப்போது இந்திய அணியை வழிந டத்திய அஜிங்கிய ரகானே மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் சதமடித்து ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய உதவினார். அந்த முதலிரண்டு போட்டிகளிலேயே பும்ரா, ஜடேஜா, ஷமி போன்ற முக்கிய வீரர்கள் காயமடைந்த நிலையில் சிட்னியில் நடைபெற்ற 3வது போட்டியில் ஒரு கட்டத்தில் ரிசப் பண்ட் அதிரடியால் வெற்றியை நெருங்கிய இந்தியா அவர் அவுட்டானதும் தோல்வியின் பிடியில் சிக்கியது.

ஆனால் இறுதியில் காயத்துடன் போராடிய அஸ்வின் – விகாரி ஆகியோர் ட்ரா செய்ய வைத்தனர். மேலும் அப்போட்டியில் “32 வருடங்களாக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் காபாவுக்கு வந்து முடிந்தால் மோதி பாருங்கள் என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பைன் வம்பிழுத்ததும் அதற்கு எங்கள் ஊருக்கு வாருங்கள் அதுவே உங்களது கேரியரின் கடைசி போட்டியாக இருக்கும்” என்று அஷ்வின் மாஸ் பதிலடி கொடுத்ததும் ரசிகர்களால் மறக்க முடியாது.

- Advertisement -

ஆச்சரியப்படும் வகையில் இம்முறை அஷ்வின் விளையாடும் நிலையில் அவர் விளையாடவில்லை என்பது வேறு கதை. அதை தொடர்ந்து காபாவில் நடைபெற்ற கடைசி போட்டியில் சிராஜ், ஷார்துல் தாகூர், தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்ற அனுபவமற்ற வீரர்களை வைத்துக் கொண்டே மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா இறுதியில் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரது அபார ஆட்டத்தால் சிறப்பான வெற்றி பெற்று மீண்டும் 2 – 1 (4) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரலாற்றில் நிகழ்ந்த 5 மறக்க முடியாத சர்ச்சை நிகழ்வுகள்

மொத்தத்தில் 36க்கு ஆல் அவுட்டாகி ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் போன்ற முக்கிய வீரர்களை வைத்துக் கொண்டு விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களுடன் சாதித்த இந்தியா வரலாற்றின் மிகச்சிறந்த கம்பேக் வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்தது உங்களுக்கு நினைவில்லையா என்று இந்திய ரசிகர்கள் தற்போது பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement