IND vs ENG : என்னாது மெக்கல்லமா, டிராவிட்னா யாருனு தெரியுமா – இங்கிலாந்தை தெறிக்கவிடும் இந்திய ரசிகர்கள்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதியான நேற்று பர்மிங்காம் நகரில் துவங்கியது. கடந்த வருடம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்ற போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முக்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் 17, புஜாரா 13, விராட் கோலி 11, ஷரேயஸ் ஐயர் 15 என இந்தியாவின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினார்.

அதனால் 98/5 என அதிர்ச்சி நிறைந்த மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா மேலும் விக்கெட்டை விடாமல் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதில் ஒருபுறம் ஜடேஜா மெதுவாக பேட்டிங் செய்து கம்பெனி கொடுக்க மறுபுறம் ஆரம்பம் முதலே தனக்கே உரித்தான பாணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் விரைவாக ரன்களை குவித்தார்.

- Advertisement -

இந்தியா மாஸ்:
நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய இந்த ஜோடியில் டி20 இன்னிங்ஸ் போல மிரட்டலாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் அதிரடியான பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து இந்தியாவை தூக்கி நிறுத்தினார். அதிலும் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை இறங்கி வந்து பவுண்டரியை தெறிக்கவிட்ட அவர் சுழல் பந்துவீச்சாளர் ஜாக் லீச்சை ஜாம்பவான் கங்குலியை போல் இறங்கி இறங்கி வந்து இமாலய சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். தொடர்ந்து பட்டையை கிளப்பிய அவர் வெறும் 89 பந்துகளில் சதமடித்து ஜடேஜாவுடன் 6-ஆவது விக்கெட்டுக்கு 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தலைநிமிரச் செய்தார்.

இறுதியில் 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 146 (111) ரன்களை 131.53 என்ற டி20 இன்னிங்ஸ் ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட அவர் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷார்துல் தாகூர் 1 ரன்னில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நிற்கும் ஜடேஜா 83* ரன்களுடன் களத்தில் இருக்கும் நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 200 ரன்களை தொடுமா என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 338/7 என்ற நல்ல நிலைமைக்கு போராடி வந்துள்ளது.

- Advertisement -

மெக்கல்லம் – ஸ்டோக்ஸ் கூட்டணி:
முன்னதாக கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையில் இந்த தொடரில் திண்டாடிய இங்கிலாந்து இம்முறை வலுவான அணியாக மாறியுள்ளதால் இந்தியாவின் வெற்றியை சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமீப காலங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்துக்கு புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்ற பின் கடந்த வாரம் சொந்த மண்ணில் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடி 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டது.

அதிலும் அந்தத் தொடரின் 3 போட்டிகளிலும் நியூசிலாந்து நிர்ணயித்த 250க்கும் மேற்பட்ட ரன்கள் இலக்கை அதிரடியாக சேசிங் செய்து முரட்டுத்தனமான வெற்றிகளைப் பெற்ற இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புத்துயிர் பெற்று பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அத்தியாயத்தை துவங்கியது. அந்த வெற்றிக்கு புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் முக்கிய காரணகர்த்தாவாக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

சொல்லப்போனால் அதேபோல் இப்போட்டியிலும் விளையாடி கடந்த வருடம் பெற்ற தோல்விக்கு இந்தியாவை தோற்கடித்து 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்வோம் என இப்போட்டிக்கு முன்பாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரித்திருந்தார். அப்படி அதிரடியாக மாறியுள்ள இங்கிலாந்தை ரோகித் சர்மா இல்லாமல் இந்தியாவால் சமாளிக்க முடியுமா என்று அந்நாட்டு ரசிகர்கள் இப்போட்டிக்கு முன்பாக சவால் கொடுத்திருந்தனர்.

டிராவிட் – பும்ரா:
ஆனால் இப்போட்டியில் முதல் நாளிலேயே சரிந்தாலும் வீழாத இந்தியா ரிஷப் பண்ட் – ஜடேஜா ஆகியோரால் கொதித்தெழுந்து போராடத் துவங்கியுள்ளது. அதை பார்த்த இந்திய ரசிகர்கள் ப்ரெண்டன் மெக்கல்லம் மட்டும்தான் அதிரடியை கொண்டுவர முடியுமா, எங்களின் ராகுல் டிராவிட் என்றால் யார் என்று தெரியுமா என சமூக வலைதளங்களில் காலரை தூக்கிவிட்டு பேசுகிறார்கள்.

இதையும் படிங்க : IND vs ENG : அவர இவ்வளவு சந்தோசமா பார்க்கவே முடியாது, ரிஷப் பண்ட்க்கு நன்றி தெரிவித்த ஜஹீர் கான் – எதற்குனு பாருங்க

பிரண்டன் மெக்கல்லம் எப்போதுமே அதிரடியாக மட்டும் ஆடக்கூடியவர் ஆனால் ராகுல் டிராவிட் பொறுமையாக இருந்தாலும் தேவையான நேரத்தில் எரிமலையாக வெடிக்கக்கூடியவர் என்று கூறும் இந்திய ரசிகர்கள் அதேபோலத்தான் அவரது பயிற்சியிலும் இங்கிலாந்துக்கு அதன் சொந்த அதிரடி எனும் வைத்தியத்தை பதிலடியாக இந்தியா கொடுத்துள்ளதாக பெருமை கொள்கின்றனர். அத்துடன் இதே அதிரடியை பின்பற்றி இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்றும் இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர்.

Advertisement