
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் துவங்குகிறது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தற்போது சேப்பாக்கத்தில் வலைப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் கலந்து கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இலங்கைத் தொடருக்கு பின் லண்டனுக்குச் சென்றிருந்த அவர் தற்போது மீண்டும் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த விராட் கோலியை பார்க்க சென்றிருந்ததாக டௌசீப் அஹ்மத் என்ற இந்திய ரசிகர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
அப்போது பயிற்சியை முடித்து விட்டு உங்களைப் பார்க்க வருகிறேன் என்று சொன்ன விராட் கோலி அதுவரை சென்னை வெயிலில் நிற்காமல் பெவிலியனுக்கு சென்று காத்திருக்குமாறு சொன்னதாகவும் அந்த ரசிகர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அந்த சந்திப்பில் மிகப்பெரிய கிரிக்கெட்டர் என்ற பெருமை 0% கூட இல்லாமல் தங்களிடம் பேசிய விராட் கோலி புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் டௌசீத் அஹ்மத் கூறியுள்ளார்.
இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நேற்று விராட் கோலியை சந்தித்த தருணம் நடந்தது. நானும் எனது நண்பரும் பாய் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா? என்று விராட் கோலியிடம் கேட்டோம். அதற்கு கொஞ்சம் இருங்கள் வருகிறேன் என்று விராட் கோலி சொன்னார். அதன் பின் நாங்கள் அவரைப் பார்க்க களத்திற்கு சென்றோம்”
“அவரிடம் என்னுடைய நண்பன் சில பேட்டிங் ஆலோசனைகளை கேட்டார். அதை தெரிவித்த விராட் கோலி இங்கே வெயில் அதிகமாக இருப்பதால் உடைமாற்றும் அறைக்கு செல்லுங்கள் என்று எங்களிடம் சொன்னார். அவருடைய பேச்சைக் கேட்டு உடைமாற்றும் அறைக்கு சென்ற நாங்கள் மொத்த இந்திய அணியையும் பார்த்தோம். அங்கே மீண்டும் வந்த விராட் கோலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்”
இதையும் படிங்க: சச்சின் மாதிரி ரோஹித் அதிகம் அதை செய்ய மாட்டாரு.. கோலி மாதிரி மாறவும் இல்ல.. ஜான்டி ரோட்ஸ் பாராட்டு
“அதன் பின் அவரிடம் 7 நிமிடங்கள் வரை பேசினோம். அப்போது 0% அடிடியூட் மட்டுமே இருந்தது” என்று விராட் கோலியுடன் எடுத்த புகைப்படத்தையும் ஆதாரமாக பதிவிட்டுள்ளார். அந்த வகையில் ரசிகரிடம் மிகவும் தன்மையுடன் பேசி புகைப்படம் எடுத்துக்கொண்ட விராட் கோலியை “என்னா மனுஷன்ங்க” என்று இதர ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.