பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திர இந்திய வீரர் – முதல் படத்தின் விவரம் இதோ

Shardhul Thakur India Dhawan Shreyas Iyer
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா பயணித்துள்ளது. அதனால் சீனியர் வீரர் ஷிகர் தவான் தலைமையில் இத்தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் சாதித்துக் காட்டியுள்ளது.

ஆனால் இத்தொடரில் கேப்டனாக செயல்பட்ட ஷிகர் தவானின் இந்திய கிரிக்கெட் கேரியர் தற்சமயத்தில் கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் ஆரம்ப காலத்தில் தடுமாறிய இவரும் கடந்த 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனியின் அற்புதமான முடிவால் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் தங்க பேட் விருதை வென்று நாளடைவில் ரோகித் சர்மாவின் மானசீக பார்ட்னராக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வந்தார்.

- Advertisement -

மந்தமான எதிர்காலம்:
அதிலும் 2018 ஆசிய கோப்பை, 2018இல் இலங்கையில் நடைபெற்ற நிதியாஸ் முத்தரப்பு கோப்பை போன்ற தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று ஐசிசி உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியதால் இவரை ரசிகர்கள் “மிஸ்டர் ஐசிசி” என்று அழைக்கிறார்கள். ஆனால் 2019 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறிய அவரை குணமடைந்து திரும்பிய போது தேர்வுக்குழுவும், பிசிசிஐயையும் குப்பையை போல் பார்த்தது.
ஏனெனில் அவர் இல்லாத சமயங்களில் அவரது இடத்தில் அவரை விட சற்று அபாரமாக செயல்பட்டு நம்பிக்கை நட்சத்திர இளம் வீரராக உருவெடுத்த கேஎல் ராகுல் அவரது இடத்தை தனதாக்கி விட்டார். மறுபுறம் ஐபிஎல் தொடரில் 400, 500 போன்ற பெரிய ரன்களை குவித்தாலும் அதை அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுக்க தடுமாறுவதை காரணமாக வைத்து இவரை முதலில் டி20 கிரிக்கெட்டில் கழற்றிவிட்ட பிசிசிஐ நாட்கள் செல்லச் செல்ல ஒருநாள் கிரிக்கெட்டில் ஒதுக்கி வருகிறது.

வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் இதுவரை ஆற்றிய பங்கிற்காக மட்டும் போனால் போகட்டும் என்று ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா போன்ற முக்கியமில்லாத அல்லது 2ஆம் தர எதிரணிகளுக்கு எதிரான தொடர்களில் மட்டும் கேப்டனாக வாய்ப்பு கொடுக்கும் பிசிசிஐ அடுத்த தொடரிலேயே அவரை கழற்றி விடுகிறது. இதனால் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பையில் விளையாடும் லட்சியத்தைக் கொண்டிருந்தாலும் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே 36 வயதை கடந்து விட்டதால் அடுத்த உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்காமல் போகும் பட்சத்தில் ஓய்வை அறிவிக்க காத்திருக்கும் இவர் கிரிக்கெட்டை தவிர்த்து அடுத்த காட்டமாக சினிமாவில் கால் பதிக்க முன்கூட்டியே முடிவெடுத்துள்ளார்.

- Advertisement -

ஆம் ஏற்கனவே தந்தையிடம் அடி வாங்குவது முதல் ஜடேஜாவை கலாய்த்தது வரை விதவிதமாக ஜாலியான வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய அவருக்கு தற்போது “டபுள் எக்ஸ்எல்” எனும் பாலிவுட் படத்தில் முதல் முறையாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. உடல் பருமனான பெண் சந்திக்கும் பிரச்சனைகளை தாண்டி அந்தப் பெண்ணுக்குள் இருக்கும் ஆசைகள், கனவுகளை அந்தப் பெண் அடைகிறார் என்ற கதை களத்தை கொண்ட அந்த படத்தை இயக்குனர் ஸட்ரம் ரமணி இயக்குகிறார்.

அதில் பிரபல நடிகைகள் ஹியூமா குரேசி மற்றும் சோனாக்ஷி சின்கா ஆகியோர் நடிக்கவுள்ளனர். அந்த படத்தின் வாயிலாக பாலிவுட் திரையில் ஷிகர் தவான் கெஸ்ட் ரோலில் தோன்றுகிறார். வரும் நவம்பர் 4இல் வெளியாகும் அந்த படத்தில் அவரது கேரக்டர் வெற்றி பெறும் பட்சத்தில் நாளடைவில் நிறைய திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : IND vs SA : 50 வருட ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக ரசிகர்கள் சந்தித்த அரிதான நிகழ்வு – கலாய்த்த வாசிம் ஜாபர்

இந்த படத்தில் நடிப்பதற்காக ஹியூமா குரேசியுடன் ஷிகர் தவான் ஜோடி சேர்ந்து நிகழ்த்தப்பட்ட போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement